மது வாங்க அரசுப் பள்ளியில் கொடுக்கப்படும் டோக்கன்கள்.. சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்!

 

மது வாங்க அரசுப் பள்ளியில் கொடுக்கப்படும் டோக்கன்கள்.. சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்!

நேற்று ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக்குகளில் ரூ.150 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கொரோனா வைரஸால் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், நேற்று சென்னை காவல்துறைக்கு உட்பட்ட டாஸ்மாக்குகள் தவிர மற்ற அனைத்தும் திறக்கப்பட்டு விட்டன. அதனால் காலை முதலே குடிமகன்கள் வரிசையில் நின்று, கொரோனா தடுப்பு நடவடிக்கை விதிமுறைகளை பின்பற்றி மது வாங்கிச் செல்கின்றனர். 40 நாட்களாக மது இல்லாமல் தவித்து வந்த குடிமகன்களுக்கு நேற்று ஒரே கொண்டாட்டம் தான். 

கடும் வெயில் என பாராது கூட, சரக்கு வாங்கி தீர வேண்டும் என்று நோக்கில் மதுபிரியர்கள் வரிசையில் காத்துக் கிடந்தனர். இதற்கு ஒரு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியிருப்பினும், மதுக்கடைகளை திறக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றமே பச்சைக்கொடி காட்டி விட்டது. ஆண்கள், பெண்கள் என அனைவரும் மதுவிற்காக வரிசையில் காத்துக் கிடக்கும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. நேற்று ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக்குகளில் ரூ.150 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ttn

இந்நிலையில்,சேலம், ஓமலூர் அருகே உள்ள கமலாபுரம் என்னும் இடத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்றில் மது வாங்க டோக்கன்கள் தரப்படுவதாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், குடிமகன்கள் பள்ளியில் இருந்து டோக்கன்களை வாங்கிச் செல்கின்றனர். இந்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,  இது குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர், பள்ளியில் டோக்கன் விற்கப்பட்டதற்கு டாஸ்மாக் நிர்வாகமும் பஞ்சாயத்து அதிகாரிகளும் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.