மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த முன்வர வேண்டும்! – சீமான் சொல்கிறார்

 

மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த முன்வர வேண்டும்! – சீமான் சொல்கிறார்

அரை நூற்றாண்டுகளாய் தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலெல்லாம் புரையோடிப்போய் எண்ணற்ற உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவைவிடக் கொடிய மது எனும் உயிர்க்கொல்லியை அரசு மீண்டும் திறந்திருப்பது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறையை சீரழிக்கும் மதுக்கடைகளைப் படிப்படியாக மூடி, முழு மதுவிலக்கினை அமல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
நாம் தமிழர் சீமான் இன்று (மே 8) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“அரை நூற்றாண்டுகளாய் தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலெல்லாம் புரையோடிப்போய் எண்ணற்ற உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவைவிடக் கொடிய மது எனும் உயிர்க்கொல்லியை அரசு மீண்டும் திறந்திருப்பது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று ஒரு நாள் மதுக்கடைகளைத் திறந்ததற்கே பல விபத்துகளும், சோக சம்பவங்களும் இன்றைய செய்தித்தாள் எங்கும் நிறைந்திருக்கிறதை கண்டு மனம் பதை பதைக்கிறது. அதிலும் சமூகவிலகளைச் சிறிதும் கடைபிடிக்காமல் மதுக்கடை வாசல்களில் கூட்டம் முன்னடியடித்து அலைமோதுவதைப் பார்க்கையில் ‘மதுவை விற்று வருமானம் ஈட்டுவது குஷ்டரோகியின் கையிலிருக்கும் தேனை நக்கிச் சுவைப்பதற்கும் ஒப்பாகும்’ என முழக்கமிட்ட பேரறிஞர் அண்ணாவின் வழிவந்த இருபெரும் திராவிடக் கட்சிகளும் மாறி மாறி ஆண்டு தமிழகத்தில் பல்லாயிரம் குடி நோயாளிகளை உருவாக்கி வைத்திருப்பதைத்தான் காட்டுகிறது.

tasmac-opens-tn

பல மாநிலங்களில் தனியார் முதலாளிகள் நடத்தும் மதுபானக்கடைகளிலிருந்து அரசுக்குக் குறிப்பிட்ட விழுக்காடு வருமானம் வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் அரசின் முதன்மைத் தொழிலாகவே மதுபானக்கடைகள் நடத்துதல் விளங்குகிறது. மதுபானங்களின் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தையே அரசின் முக்கிய வருமானமாக ஆட்சியாளர்கள் கருதுவது ஆகப்பெருங்கொடுமை.

மாநில அரசின் முக்கிய வருமானமாக நில வரி, வேளாண்மை வர , சொத்துவரி, விற்பனை வரி, கேளிக்கை வரி, சுங்க வரி, சாலைப் போக்குவரத்து வரி, மதிப்புக்கூட்டு வரி, தொழில் வரி, முத்திரைத்தாள் வரி மற்றும் இன்னும் பிற வரிகள் என எத்தனையோ வரிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட அரசுக்கு மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் வருமானம் பெரிதாகப்படுகிறதா? அரசு நடத்த வேண்டிய மருத்துவமனைகளும், கல்விக்கூடங்களும் தனியார் வசம் உள்ளன. தனியார் நடத்த வேண்டிய மதுபானக் கடைகளை அரசு நடத்துகின்றது. இதனைவிட நிர்வாகச் சீர்கேடு ஒன்றுண்டா? மக்கள் நலனுக்காகத் தான் மதுக்கடைகளைத் திறக்கிறோம் என்று அமைச்சர் பெருமக்கள் பேட்டி தருகின்றனர். எந்த மக்கள் நலனுக்காக என்று தான் தெரியவில்லை? வயிற்றுப்பசி போக்கிட சோறு கேட்கும் மக்கள் தான் நமக்குத் தெரிகின்றனர், அமைச்சர் பெருமக்களுக்கோ சாராயம் கேட்கும் மக்கள் தெரிகிறார்கள்.

tasmac-tn-89

அரசின் போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை எல்லாம் தொடர்ந்து இழப்பில் இயங்குகின்றபோது அரசு மதுபானக்கடைகள் மட்டும் தொடர்ந்து இலாபத்தில் இயங்குகின்றன. அரசு நடத்தும்போது இழப்பில் இயங்கும் இவைகள் தனியார் நடத்தும்போது மட்டும் எப்படி இலாபத்தில் இயங்குகின்றன.? நுட்பமாக நோக்கினால், எங்கெல்லாம் தனியார் முதலாளிகள் லாபமடைய வழியுள்ளதோ அவையெல்லாம் இலாபத்தில் இயங்குகின்றன. எனில், நாட்டை ஆட்சி செலுத்துவது யார்? என்ற கேள்வி நம்முள் எழுகிறது.

ஏராளமான இயற்கை வளங்கள், மனித ஆற்றல் , நில வளமும், நீர்வளமும், கடல் வளமும் சூழ்ந்த தமிழகத்தில் தற்சார்புப்பசுமை பொருளாதார உற்பத்திக்கான திட்டங்களை முன்னெடுக்காது அதை நோக்கி மக்களை இட்டுச்செல்லாது , மக்களுக்கான நிரந்தர வேலைவாய்ப்புகளையோ, தொழில் வாய்ப்புகளையோ ஏற்படுத்தாமல் அவர்கள் உடல் உழைப்புமூலம் பெறும் சொற்ப வருமானத்தையும், மதுவிற்பனை என்ற பெயரில் அரசே உறிஞ்சிக்கொள்வது கொடுமையான அரச வன்முறையன்றி வேறில்லை.

kamalapuram

இலவசமாகத் தரவேண்டிய கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்டவற்றைத் தனியாரிடம் தாரைவார்த்து விற்பனைப் பொருளாக்கிவிட்டு, விற்பனைப் பொருள்களான தொலைக்காட்சி, மின்விசிறி, அரவை இயந்திரம் போன்றவற்றை அரசு இலவசமாகக் கொடுப்பது எப்படிக் கொடுமையானதோ, அதைப்போலத்தான் தற்போது கொடிய கொரோனா நுண்மியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான சரியான மருத்துவம், ஊட்டசத்துமிக்க உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டிய அரசு மதுபானக்கடைகளைத் திறந்து மக்களைக் குடிக்க வைப்பதென்பது மிகவும் வேதனையளிக்கக்கூடிய முறையற்ற செயலாகும். அதுவும் ஊரடங்கால் தொழில், வேலைவாய்ப்பு ஆகியவை பறிபோய்ச் சிறிதும் பொருளாதாரமற்று வறுமையில் வாடும் மக்கள் ஒருபுறம், அண்டை மாநிலங்களைவிட நாளுக்குநாள் நோய்த்தொற்று வேகமாகப் பரவி பல பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் உயர்வது மறுபுறமெனத் தமிழக மக்கள் பேராபத்தான சூழ்நிலையில் உள்ளபோது மதுக்கடைகளைத் திறக்கிற அரசின் முடிவு எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. ஏற்கனவே,மதுக்கடைகளை நிரந்தரமாக மூடவேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் உறுதியான நிலைப்பாடு. இதனைக் கடந்த பத்தாண்டுகளாக நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வலியுறுத்தியும், அதற்காகப் போராடியும் வருகிறது.

tasmac-open

நீதிமன்றமும் , பெண்களும்கூடப் பல்வேறு இடங்களில் மதுக்கடைகளை மூடச்சொல்லித் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். அந்தத் தொடர் கோரிக்கைகள் தந்த அழுத்தத்தின் காரணமாகத்தான் முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதாவும் மதுக்கடைகளைப் படிப்படியாக மூடுவதற்கான அறிவிப்பை தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்து, அதன்படி 500 கடைகளை முதற்கட்டமாக மூடினார். அவரது வழியில் செயல்படுவதாகக் கூறும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி வரலாற்றில் இடம்பெறுவதற்கான அரிய வாய்ப்பை நழுவ விட்டுவிட்டதாகவே தோன்றுகிறது. கடந்த 40 நாட்களாகத் தமிழகத்தில் தொடர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள்கூட மதுவை மறந்து, அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்தனர். தமிழக மக்களிடம் மதுக்கடைகளை மூடியதற்கு வரவேற்பும், நிரந்தரமாக மூடவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் மேலெழுந்த வேளையில் யாருமே கோரிக்கை வைக்காத நிலையில் மாநில அரசு தன்னிச்சையாக, அதுவும் ஊரடங்கு முடிவடையும் முன்னரே மதுக்கடைகளைத் திறப்பது என்ற முடிவை வெளியிட்டது அனைத்துத் தரப்பு மக்களிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாரோ ஒரு சில தனியார் முதலாளிகளின் இலாபத்தை மட்டுமே மனதில்கொண்டு ஒட்டுமொத்தத் தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறைகளின் நல்வாழ்வினையே குழிதோண்டிப் புதைக்கும் வகையிலான மதுக்கடைகளைத் திறக்கிற முடிவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

sanity-workers-78.jpg

மதுக்கடைகள் தொடர்ந்து செயல்பட்டால், கடந்த நாற்பது நாட்களுக்கும் மேலாக மருத்துவர்கள், காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப்பொறியாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரை ஒருங்கிணைத்து தமிழக அரசு முன்னெடுத்த சிறப்பான கொரோனோ நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கான கடுமையான உழைப்பையும் , அர்ப்பணிப்பையும் கேலிக்கூத்தாக்கும் செயலாக அது அமைந்துவிடும் என்றும், அது மாநில அரசுக்கு மிகப்பெரிய அவப்பெயரையும் ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.