மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மூடல்; காரணம் என்ன?

 

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மூடல்; காரணம் என்ன?

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை இன்று காலை மூடப்பட்டது

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை இன்று காலை மூடப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் மதுரையில் அமைந்துள்ளது. வைகை ஆற்றின் தென்பகுதியில் மதுரை மாநகரின்  அடையாளமாக வீற்றிருக்கும் மீனாட்சியம்மன் கோயிலில், சம அளவில் முக்கியத்துவம் பெற்ற மீனாட்சி அம்மன் சன்னதியும், சுந்தரேசுவரர் சன்னதியும் தனித்தனியே அமைந்துள்ளன.

மீனாட்சி அம்மன் கோயிலில் இரவு நேர காவலராக, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மணலூரை சேர்ந்த சுந்தரராஜன் (57) என்பவர் பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வழக்கம் போல் பணிக்கு வந்த அவருக்கு இரவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், கோயிலுக்குள்ளேயே அவரது உயிர் பிரிந்துள்ளது.

இதனை தொடர்ந்து இன்று காலை வழக்கம் போல் 5.30 க்கு திறக்கப்பட வேண்டிய கோயில் நடை திறக்கப்படவில்லை. கோயிலுக்குள் மரண சம்பவம் நிகழ்ந்துள்ளதால், கோயிலை சுத்தம் செய்து, பரிகார பூஜை முடிந்த பின்னர் கோயில் நடை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதும் தமிழர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். கோயில்களில் அதிகாலை முதலே மக்கள் சிறப்பு வழிபாடு செய்து இறைவனை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், மீனாட்சி அம்மன் கோயில் நடை திறக்கப்படாததால், சாமி தரிசனம் செய்ய வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஐயப்ப பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் சீசன் என்பதால், வெளியூர்களில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்கள், நடை திறக்கப்படும் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பொருட்டு நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.