மதுரை ஆதீனம் மீது சட்டப்படி நடவடிக்கை; டிடிவி தினகரன் எச்சரிக்கை!

 

மதுரை ஆதீனம் மீது சட்டப்படி நடவடிக்கை; டிடிவி தினகரன் எச்சரிக்கை!

பாஜக-வுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக வசம் டிடிவி செல்வதும் கேள்விக்குறியே. எனினும், சசிகலா விடுதலையை வைத்து, அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை எனும் கூற்றும் உற்று நோக்கப்படுகிறது

சென்னை: மதுரை ஆதீனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அக்கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறியது. அந்த வகையில், பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம், மற்றும் அதிமுக கட்சிப் பெயர்களை, டிடிவி தினகரனை ஓரங்கட்டி விட்டு இணைந்த ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

முன்னதாக, இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் டிடிவி தினகரன் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு பின் ஜாமீன் வெளிவந்தார். இதையடுத்து, நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட அவர் அத்தொகுதியில் அபார வெற்றி பெற்றார். பின்னர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக தீவிரமாக கட்சிப் பணியாற்றி வருகிறார்.

பாஜக மற்றும் திமுக எதிர்ப்பு அரசியலை தொடர்ந்து முன்னெடுத்து வரும் தினகரனின் அமமுக கட்சி, எதிர்வரவுள்ள மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் எஸ்டிபிஐ கட்சியுடன் மட்டும் கூட்டணி வைத்து அந்த கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்கி கொடுத்து மீதமுள்ள தொகுதிகளில் தனித்து களம் காண்கிறது.

ttv dhinakaran

அதேபோல், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக-வின் தற்போதைய தலைமை மீது அக்கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த அதிருப்தியாளர்களின் வாக்கு அமமுக-வுக்கு போகலாம் என்பதால் அதிமுக தலைமை கலக்கமடைந்து இருப்பதாக தெரிகிறது.

மேலும், தேர்தலுக்கு பின்னர் ஒரே எதிரியான திமுக-வை வீழ்த்தும் நோக்கில் அதிமுக-அமமுக இணைப்பு நடக்கலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது. ஆனால், பாஜக-வுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக வசம் டிடிவி செல்வதும் கேள்விக்குறியே. எனினும், சசிகலா விடுதலையை வைத்து, அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை எனும் கூற்றும் உற்று நோக்கப்படுகிறது.

sasikala ttv dhinakaran

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் அ.தி.மு.கவும்., அ.ம.மு.க-வும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் எடப்பாடி பழனிசாமியும், டி.டி.வி தினகரனும் இணைவது உறுதி என்றும் மதுரை ஆதினம் தெரிவித்தார். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தினகரன் மதுரை ஆதீனம் கூறியது ஆதாரமற்றது என்று மறுப்பு தெரிவித்திருந்தார்.

madurai aadhenam

இந்நிலையில், அதிமுகவில் தினகரனை இணைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தையில் யார் யார் உள்ளார்கள் என்பதை என்னால் இப்போது வெளிப்படையாகக் கூற இயலாது. தேர்தலுக்குப் பின்னர், அதிமுகவில் தினகரன் இணையும் காலம் வரும் என செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம் மீண்டும் அதே கருத்தை தெரிவித்தார்.

இதையடுத்து, அதிமுகவுடன் அமமுக இணைய மறைமுக பேச்சுவார்த்தை நடப்பதாக மீண்டும் மதுரை ஆதினம் தெரிவித்திருக்கிறார். யாருக்கோ உதவுவதற்காக இப்படி பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பினால், மதுரை ஆதீன மடத்தின் பெயரைக் காக்கவாவது, அருணகிரி ஆதீனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் வாசிங்க

காதலனின் மனைவியை கொலை செய்த காதலி; மூன்று மாதத்திற்கு பிறகு கண்டுபிடித்த போலீசார்!