மதுரையில் 24 வார்டுகளில் மக்கள் தொகையை விட வாக்காளர் எண்ணிக்கை அதிகம்! – வழக்கு தொடர்ந்த தி.மு.க

 

மதுரையில் 24 வார்டுகளில் மக்கள் தொகையை விட வாக்காளர் எண்ணிக்கை அதிகம்! – வழக்கு தொடர்ந்த தி.மு.க

மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “மதுரையில் மொத்தமுள்ள 100 வார்டுகளில், 24 வார்டுகளில் மக்கள் தொகையை விட வாக்காளர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.  ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் தி.மு.க சார்பில் நீதிமன்றத்தை நாடியதால்தான் பல முறைகேடுகள் தவிர்க்கப்பட்டன

மதுரையில் குறிப்பிட்ட 24 வார்டுகளில் மொத்த மக்கள் தொகையை விட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தி.மு.க தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

dmk-party-person

மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “மதுரையில் மொத்தமுள்ள 100 வார்டுகளில், 24 வார்டுகளில் மக்கள் தொகையை விட வாக்காளர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 
ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் தி.மு.க சார்பில் நீதிமன்றத்தை நாடியதால்தான் பல முறைகேடுகள் தவிர்க்கப்பட்டன. ஆனாலும் இன்னும் பல முறைகேடுகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. மதரை மாநகராட்சி வார்டுகளை மறுவரையறை செய்ததில் விதிகள் மீறப்பட்டுள்ளன. தகுந்த ஆய்வு செய்து, ஆதாரங்களைத் திரட்டிய பிறகே சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளோம். 
ஒரு தொகுதியில் மொத்த மக்கள் தொகைக்கு இணையாகவோ அல்லது அதை விடக் கூடுதலாகவோ வாக்காளர்கள் எண்ணிக்கை இருக்க முடியாது. ஆனால், 24 வார்டுகளில் மக்கள் தொகை எண்ணிக்கையை விட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுதவிர, சட்டமன்றத் தொகுதி எல்லைப் பகுதியை மாற்றக்கூடாது என்ற விதிமுறைகள் எல்லாம் மீறப்பட்டுள்ளது. மதுரை கிழக்கு தொகுதியைச் சேர்ந்தவர்கள் தற்போது மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

sellur-raju

அதேபோல், அமைச்சர் செல்லூர் ராஜூ தொகுதியில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளார்கள். இத்தனைக்கும் வார்டுக்கு சராசரியாக இருக்க வேண்டிய வாக்காளர்கள் எண்ணிக்கையை விடக் குறைவாகவே இந்த வார்டுகள் உள்ளது. ஆனால், அதிக வாக்காளர்கள் கொண்ட என்னுடைய தொகுதியிலிருந்து ஆறு வார்டுகளை குறைத்திருக்கிறார்கள். வார்டு மறு சீரமைப்பு நடுநிலையோடு நடைபெற வேண்டும்.
பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளது. 34 இடங்களில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகள் அவர்களின் எண்ணிக்கை விகிதத்துக்கு பொருந்தாமல் அமைந்துள்ளது. பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய 17 வார்டுகள் பொது வார்டு எனத் தவறாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல பொதுவாக வகைப்படுத்த வேண்டிய 17 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன” என்றார்.
மதுரை மாநகராட்சிக்குள்ளேயே இவ்வளவு குளறுபடிகள் என்றால், தமிழகம் முழுவதும் உள்ள மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் என்ன என்ன குளறுபடிகள் எல்லாம் செய்திருக்கிறார்களோ என்ற கவலை பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.