மதுபான விற்பனை: ஜெயலலிதா பாணியை கையிலெடுத்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

 

மதுபான விற்பனை: ஜெயலலிதா பாணியை கையிலெடுத்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள 3,500 மதுக்கடைகளையும் அரசே ஏற்று நடத்தும் என ஆந்திர அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டி முன்பு பாதயாத்திரை மேற்கொண்டிருந்த போது, மாநிலத்தில் மது விலக்கு கொண்டு வருவேன் என உறுதி அளித்து இருந்தார். தற்போது ஆந்திர முதல்வராகவிட்ட ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடங்கி விட்டார். மாநிலத்தில் மதுபான கடைகள் எண்ணிக்கை 4,380-லிருந்து 3,500ஆக குறைக்கப்படும் மற்றும் இறுதியில் மதுவிலக்கு முற்றிலுமாக அமல்படுத்தப்படும் என இந்த மாத தொடக்கத்தில் ஜெகன்மோகன் அரசு தெரிவித்து இருந்தது.

ஜெகன்மோகன் ரெட்டி

இந்நிலையில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செய்தது போல் அனைத்து மதுபான கடைகளையும் அரசே ஏற்று நடத்த ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆந்திர துணை முதல்வர் மற்றும் கலால் அமைச்சர் நாரயணசாமி கூறியதாவது: அரசுக்கு சொந்தமான ஆந்திர பிரதேசம் மாநில பானங்கள் கழகம் நிறுவனம் (ஏ.பி.எஸ்.பி.சி.எல்.) வரும் 1ம் தேதி மதுபான வர்த்தகத்தை ஏற்று நடத்தும். ஏ.பி.எஸ்.பி.சி.எல். நிர்வாகத்தின்கீழ், கடந்த 1ம் தேதி முதல் 475 மதுபான விற்பனை நிலையங்கள் நடந்து வருகிறது.

ஆந்திரா மதுபானகடை

மது விற்பனை கடைகளுக்காக 3,500 சூப்பர்வைசர்கள், 8,033 விற்பனையாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். மதுக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை வழக்கம் போல் திறந்திருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மது விலக்கை அமல்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆந்திரா அரசு கூறுகிறது. இருப்பினும், மது விற்பனையில் கிடைக்கும் வருவாய் பார்த்து விட்டு தனது மது விலக்கு முடிவிலிருந்து ஜெகன்மோகன் பின்வாங்கி விடக்கூடாது என பலரும் கவலைப்படுகின்றனர்.