மதம் மாறினால் பெண் தருவதாக கூறிவிட்டு கடைசியில் தராததால் மனித உரிமை ஆணையத்துக்கு சென்ற காதலன்….

 

மதம் மாறினால் பெண் தருவதாக கூறிவிட்டு கடைசியில் தராததால் மனித உரிமை ஆணையத்துக்கு சென்ற காதலன்….

தெலங்கானாவில் தங்களது மதத்துக்கு மாறினால் பெண்ணை திருமணம் செய்து தருவதாக கூறிவிட்டு, கடைசியில் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என பெண் குடும்பத்தார் மீது இளைஞர் ஒருவர் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என  பெண் வீட்டார் மீது தெலங்கானா மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த முகமது அப்துல் ஹுனைன் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நான் பிறப்பால் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவன். எனது இயற்பெயர் பாப்பிலி பாஸ்கர். கடந்த 11 ஆண்டுகளாக நானும் முஸ்லிம் பெண் ஒருவரும் காதலித்து வந்தோம். காதலியை திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் அவளது வீட்டுக்கு சென்று பெண் கேட்டேன். அப்போது எனது காதலியின் அப்பா எங்க மதத்துக்கு மாறினால்தான் மகளை திருமணம் செய்து தருவேன் என கூறினார்.

முகமது அப்துல் ஹுனைன்

காதலியை கரம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இஸ்லாம் மதத்துக்கு மாறினேன். மேலும் எனது பெயரை முகமது அப்துல் ஹுனைன் என மாற்றினேன். பின் காதலியின் தந்தையிடம் சென்று பெண் கேட்டேன். ஆனால் திருமணத்துக்கு சம்மதிக்க மறுத்து விட்டார். மேலும் அவர்கள் என்னை அடித்து விரட்டினர். கடந்த 12 மாதங்களாக என் காதலியை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவள் உயிரோடு இருக்கிறாளா. இல்லையா என்பது கூட எனக்கு தெரியாது. அதனால் மாநில மனித உரிமைகள் ஆணையத்தை நாடினேன்.

மாநில மனித உரிமைகள் ஆணையம்

மேலும், எனது காதலியை சந்தித்து பேச வாய்ப்பு தரும்படி அவளது பெற்றோரிடம் கேட்டேன். ஆனால் அவர்கள் மறுத்து விட்டார்கள். நான் எனது காதலியை திருமணம் செய்யவில்லை என்றாலும் நான் மதம் மாற மாட்டேன். எனது கடைசி உயிர் மூச்சு இருக்கும் வரை இஸ்லாம் மதத்தை பின்பற்றுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.