மசூதியை இடிக்கும் வீடியோ போலி…… அப்படி ஒரு சம்பவமே டெல்லியில் நடக்கவில்லை…. போலீஸ் தகவல்..

 

மசூதியை இடிக்கும் வீடியோ போலி…… அப்படி ஒரு சம்பவமே டெல்லியில் நடக்கவில்லை…. போலீஸ் தகவல்..

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு கும்பல் மசூதியை இடிப்பதை காட்டுகிறது. அந்த வீடியோ போலியானது என்றும், இது போன்ற எந்தவொரு சம்பவமும் தலைநகரில் நடைபெறவில்லை என டெல்லி போலீஸ் விளக்கம் கொடுத்துள்ளனர்.

வடகிழக்கு டெல்லி பகுதிகளில் கடந்த சில தினங்களாக குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு மற்றும் ஆதரவாளர்களுக்க இடையே மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல் பெரும் கலவரமாக உருவெடுத்துள்ளது. வன்முறையாளர்களின் வெறியாட்டத்துக்கு ஒரு போலீஸ் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். வன்முறையை கட்டுப்படுத்த போலீஸ் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில் எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

போலி வீடியோ காட்சி

தலைநகரில் நடக்கும் சம்பவம் என்று குறிப்பிட்டு, ஒரு கும்பல் மசூதியை சூறையாடுவதுடன், மசூதியின் மினாரில் ஏறி அனுமான் கொடியை நாட்டுவதாக வீடியோவில் காட்டப்படுகிறது. இந்த சம்பவம் டெல்லி அசோக் நகர் பகுதியில் நடந்தது என்று சிலரும், அசோக் விஹார் பகுதியில் நடைபெற்றது என்றும் சிலர் கூறினர். மற்றொரு வீடியோவில் மசூதி நெருப்பில் பற்றி எரிவது போலவும், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுவது போன்றும் காட்டப்படுகிறது. இந்த வீடியோக்கள் நாடு முழுவதும் பரவி வருகிறது. மேலும் டெல்லியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த வீடியோக்கள் அனைத்தும் போலி என டெல்லி காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது. 

போலி வீடியோ காட்சி

இது தொடர்பாக வடமேற்கு டெல்லி டி.சி.பி. அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அசோக் விஹார் பகுதியில் மசூதி சேதப்படுத்தப்பட்டதாக தவறான தகவல்\செய்தி பரவி வருகிறது. அசோக் விஹாரில் அது போன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. தயவு செய்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.