மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் ரஜினியுடன் சந்திப்பு

 

மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் ரஜினியுடன் சந்திப்பு

ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளனர்.

சென்னை: ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளனர்.

மக்கள் மன்ற விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் கடந்த வாரம் அதிரடியாக நீக்கப்பட்டனர். ரஜினிகாந்த் ‘பேட்ட’ ஷூட்டிங்கில் இருந்ததால், அவரது அனுமதி இல்லாமல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கருத்துக்கள் நிலவின. இதைத் தொடர்ந்து தனது கவனத்திற்கு உட்பட்டே நிர்வாகிகள் நீக்கப்பட்டதாக நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருந்தார்.

இதுகுறித்து ரஜினி வெளியிட்டிருந்த அறிக்கையில், “ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் சாதித்து விட முடியாது. மக்களின் ஆதரவு இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. 30, 40 ஆண்டுகளாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டும் மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலில் ஈடுபடுவதற்கோ முழு தகுதி ஆகிவிடாது. தமிழகத்தில் புது அரசியலை அறிமுகப்படுத்தி, அதன் மூலம், நல்ல மாற்றத்தை உருவாக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இதை கடுமையாக விமர்சித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் இன்று கட்டுரை வெளியாகியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “நாம் எந்த பாதையில் போனாலும் அது நியாயமானதாக இருக்க வேண்டும். நான் கூறியது கசப்பானதாக இருந்தாலும் அதில் இருந்த உண்மையையும், நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு நன்றி. என்னையும் ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது” என மறைமுகமாக திமுகவை விமர்சித்து ரஜினிகாந்த் தன் ரசிகர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள், இன்று மாலை ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் அவரை சந்தித்து  மன்னிப்பு கடிதம் வழங்கினர்.

அதனையடுத்து, நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் தன் மக்கள் மன்றத்தில் ரஜினி இணைத்துக் கொண்டார். மேலும், மக்கள் மன்றத்தின் தலைமை நிர்வாகிகளோடு ஆலோசித்து அவர்களுக்கான பதவி மீண்டும் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.