மக்கள் பெருமைப்படும் அளவுக்கு ஆட்சியை வழங்குவோம்: ஆலோசனைக்குப் பின் ராகுல் பேட்டி

 

மக்கள் பெருமைப்படும் அளவுக்கு ஆட்சியை வழங்குவோம்: ஆலோசனைக்குப் பின் ராகுல் பேட்டி

கடினமான சூழ்நிலையில் நாட்டைக் காப்பாற்ற காங்கிரஸ் தொண்டர்கள் உழைத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லி: கடினமான சூழ்நிலையில் நாட்டைக் காப்பாற்ற காங்கிரஸ் தொண்டர்கள் உழைத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நடந்த முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, பாஜக ஆட்சி செய்து வந்த ம.பி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜகவை காங்கிரஸ் பின்னுக்கு தள்ளியுள்ளது.

இந்நிலையில், அக்கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை கூடியது. அக்கூட்டத்தில், 3 மாநிலங்களில் எவ்வாறு ஆட்சி அமைப்பது, முதல்வர் பொறுப்பேற்க இருப்பது யார்? என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

rahul

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “பாஜக மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. தேர்தல் வெற்றியைத் தந்த பொதுமக்கள் மற்றும் அதற்காக உழைத்த கட்சியினருக்கு மனமார்ந்த நன்றிகள்.

தேர்தல் முடிவு மூலம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மகிழ்ச்சியானதாக இல்லை என்று பாஜகவுக்கு மக்கள் உணர்த்தியுள்ளனர். கொள்கை ரீதியாக நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். இதற்காக இத்தனை நாட்கள் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. 3 மாநிலங்களிலும் பாஜகவை தோற்கடித்திருக்கிறோம். இந்த தேர்தலின் வெற்றி தொண்டர்களுக்கும் விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றி. மக்கள் பெருமைப்படும் அளவுக்கு ஆட்சியை வழங்குவோம்” என தெரிவித்துள்ளார்.

மேலும், தெலங்கானா, மிசோரம் மாநிலத்தில் எதிர்பார்த்தது போன்று தேர்தல் முடிவுகள் இல்லை என்றும் சிறப்பான எதிர்க்கட்சியாக அங்கு செயல்படுவோம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.