மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை வெளியீடு; கமல் போட்டியில்லை!

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை வெளியீடு; கமல் போட்டியில்லை!

சட்டசபை ‘சட்டை சபை’-யாகவும், சட்டைகள் கிழிக்கப்படும் சபையாகவும் உள்ளது என மு.க.ஸ்டாலினை மறைமுகமாக கமல்ஹாசன் சாடினார்

கோவை: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் கட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.

kamalhaasan

இரண்டையும் எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் அதற்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது.

kamalhaasan

அந்த வகையில் கடந்த ஆண்டு கட்சி தொடங்கி தீவிரமாக களப்பணியாற்றி வரும் கமல்ஹாசன், வருகின்ற மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் களம் காணும் என அறிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவை சேர்த்து 40 தொகுதிகளில் “பேட்டரி டார்ச்” சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

மக்களவை மற்றும் இடைத்தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அக்கட்சிக்கு ஒரு மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேட்டரி டார்ச் லைட் சின்னத்திலேயே இந்திய குடியரசுக் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் சே.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார்.

kamalhaasan

இதையடுத்து, நாடாளுமன்றத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் 21 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 20-ம் தேதி அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் 24-ம் தேதி (இன்று) கோவையில் நடைபெறவுள்ள வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, கோவை கொடீசியா மைதானத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது.

kamalhaasan

அப்போது பேசிய கமல், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, ஜல்லிக்கட்டு போராட்டம், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டது, டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம், அரியலூர் அனிதா நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் என தன்னை அரசியலுக்கு வர வைத்த சம்பவங்களை பட்டியலிட்டு பேசினார்.

kamalhaasan

மேலும் பேசிய அவர், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்தார்கள். அது பலருக்கு இறப்பு நாளாக அமைந்தது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, இளைஞர்களையும், மீனவர்களையும் அடித்து அதற்கு அரசியல் சாயம் பூசினார்கள். தொழிலாளியின் வலி, இளைஞர்களின் கோபம் எனக்கு புரியும். சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் மக்கள் நீதி மையம் கட்சியின் குரல் ஒலிக்கும் என்றார்.

stalin

எதிர்க்கட்சி தலைவர் என்னை நடிகன் என்று கூறுகிறார். நடிகர்கள் மீது அப்படி என்ன உங்களுக்கு கோபம்? ஆம், நான் நடிகன் தான், மக்களுக்கு நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என நினைக்கும் நடிகன் நான். என்னை யார் என கேட்கிறீர்கள். உங்களை யார் என கேட்டால், அப்பாவின் மகன் என கூறுவீர்கள். சட்டசபை ‘சட்டை சபை’-யாகவும், சட்டைகள் கிழிக்கப்படும் சபையாகவும் உள்ளது என மு.க.ஸ்டாலினை மறைமுகமாக கமல்ஹாசன் சாடினார்.

டெல்லியில் விவசாயிகளை நிர்வாணமாக நிற்க வைத்தது அதிமுக அரசு தான். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை ஆளும் அதிமுக அரசு அலட்சியமாக பார்க்கிறது. அமைச்சர் ஒருவர் பெண் ஒருவருடன் பேசும் ஆடியோ வெளியானது. அந்த விவகாரத்தை கலைத்து விட்டீர்களா? என அதிமுக அரசை அப்போது சரமாரியாக சாடினார் கமல்ஹாசன்.

aiadmk

மோடியா லேடியா என கேட்டு விட்டு அதே மோடியுடன் தற்போது கூட்டணி வைத்துள்ளனர். திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என கூறி விட்டு ஓடிச் சென்று மாம்பழத்தை கையில் கொடுத்து விட்டீர்கள் என அதிமுக, திமுக கூட்டணிகளையும் கமல் விமர்சித்து பேசினார்.

தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அவலம் அகற்றப்படும். ஐந்து ஆண்டுகளில் ஐம்பது லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு. வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள கும்பங்களின் வறுமையை அகற்றபப்டும். பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக ஊதியம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். லோக் ஆயுக்தா வலிமைப்படுத்தப்படும்.

கல்வி உள்ளிட்ட பொது பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டவைகள் மாநில பட்டியலுக்கு கொண்டு வரப்படும். மனித கழிவுகளை மனிதனே அள்ளும் முறை முற்றிலும் ஒழிக்கப்படும். டோல் கட்டணங்கள் முழுமையாக நிறுத்தப்படும். அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடுக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மாநில எம்.எல்.ஏ-க்களால் ஆளுநர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்ட அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய கமல், பிரதமர் மோடி பணக்காரர்களின் காவலாளி என மோடியையும், பாஜக அரசையும் கடுமையாக சாடினார்.

இறுதியாக நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் கட வேட்பாளர் பட்டியல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். இந்த பட்டியலில் கமல்ஹாசனின் பெயர் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்தது. ஆனால், அவரது பெயர் இடம்பெறாதது அக்கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் வாசிங்க

தேர்தலுக்கு நன்றி; 17 ஆண்டுகளுக்கு பின்னர் மின்சார வசதி கிடைத்த பள்ளி!