மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய தொழிலதிபர் – பின்னடைவை சந்திப்பாரா கமல் ?

 

மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய தொழிலதிபர் – பின்னடைவை சந்திப்பாரா கமல் ?

கட்சி நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மக்கள் நீதி மய்யம் கடலூர் மற்றும் நாகை பொறுப்பாளர் சி.கே குமரவேல் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளார்.

கட்சி நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மக்கள் நீதி மய்யம் கடலூர் மற்றும் நாகை பொறுப்பாளர் சி.கே குமரவேல் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளார். தனது விலகல் கடிதத்தையும் கட்சித் தலைமைக்கு அனுப்பிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனித்துப் போட்டி 

 மக்களவை தேர்தலில் 40 தொகுதியிலும், 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலிலும் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கமல் ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

mnm kamal

இந்த நிலையில், 40 தொகுதியிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வரும் 20 – ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று இன்று காலை அறிவிக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யத்தின் மற்ற தொகுதி வேட்பாளர்கள் குறித்து செய்திகள் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில் கடலூர் தொகுதி செ.கே. குமரவேலுக்கு வழங்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

பதவி விலகல் 

 ஆனால்  சி.கே.குமரவேல் திடீரென பதவி விலகல் கடிதத்தை கமலுக்கு அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார்.  கடலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படவிருந்த தொழிலதிபர்  சி கே குமரவேல் கட்சியின் நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தைக் கொடுத்திருப்பது மக்கள் நீதி மய்யத்தில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

mnm kamal

கமலஹாசனின் நோக்கம் நல்லதாக இருந்தாலும் அவரைச் சுற்றி இருப்பவர்கள் அப்படி இல்லை எனவும், தனது விலகலுக்கு முழுக்காரணம் உட்கட்சி அரசியல்தான் என்றும்  குமரவேல் தெரிவித்துள்ளார். சி.கே குமரவேல் சென்னை மற்றும் பிற நகரங்களில் பிரபலமான அழகு நிலையமான ‘நேச்சுரல்ஸ் சலூன்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மய்யம் அறிக்கை 

இந்நிலையில், விருப்ப மனு பெற்று வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே தான் தான் கடலூர் தொகுதி வேட்பாளர் என்று சி.கே குமரவேல் சமூக வலைத்தளங்களில் அறிவித்ததாகவும், இது கட்சியின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது எனவும் அதனால் சி.கே குமரவேலின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாகவும் மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.