மக்களுக்கு பணம்தான் வேணும்… கடன் இல்லை… அவங்க வங்கி கணக்குல பணத்தை போடுங்க…பிரதமருக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

 

மக்களுக்கு பணம்தான் வேணும்… கடன் இல்லை… அவங்க வங்கி கணக்குல பணத்தை போடுங்க…பிரதமருக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

மக்களுக்கு பணம்தான் வேணும். கடன் இல்லை. ஆகையால் மக்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்துவது குறித்து யோசிங்க என பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

தொற்று நோயான கொரோனா வைரஸ் நம் நாட்டில் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் நடைமுறையில் உள்ள லாக்டவுனால் பல கோடி பேர் வேலை வாய்ப்பை இழந்து வருமானத்துக்கு வழியில்லாமல் திண்டாடி வருகின்றனர். இம்மாதம் 3ம் தேதி வரையிலான 40 நாட்களும் அத்தியாவசிய கடைகள் மற்றும் சேவைகளை தவிர்த்து மற்ற அனைத்து துறைகளும் முடங்கி கிடந்ததால் நாட்டின் பொருளாதாரமும் அதள பாதாளத்தில் விழுந்தது.

பிரதமர் மோடி

கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்க பிரதமர் நரேந்திர மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். அதனை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மொத்தம் கடந்த சில நாட்களாக துறைவாரியாக சிறப்பு பொருளாதார திட்டங்கள் குறித்து தகவல்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமரை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்

சூம் வீடியோ கால் வாயிலாக செய்தியாளர்களுக்கு ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: விவசாயிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு ‘கடன் தொகுப்புகள்’ உடனடி கள நிவாரணம் வழங்காது. நம் மக்களுக்கு பணம்தான் தேவை. அந்த தொகுப்பை (சிறப்பு பொருளாதார திட்டங்கள்) பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். நேரடி பண பரிமாற்றம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் 200 நாட்கள் வேலை, விவசாயிகளுக்கு பணம் ஆகியவை குறித்து மோடிஜி யோசிங்க. ஏனென்றால் அவர்கள் இந்தியாவின் எதிர்காலம். தெருவில் நடந்து செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு பணம் தேவை, கடன் அல்ல. துன்பப்படும் விவசாயிக்கு பணம் தேவை, கடன் அல்ல. நாம் அதனை செய்யாவிட்டால் இது ஒரு பேரழிவு பிரச்சினையாக மாறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.