மக்களவை தேர்தல் 2019; மதுரையில் களமிறங்கும் வேள்பாரி எழுத்தாளர்-மா.கம்யூ., வேட்பாளர்கள் அறிவிப்பு!

 

மக்களவை தேர்தல் 2019; மதுரையில் களமிறங்கும் வேள்பாரி எழுத்தாளர்-மா.கம்யூ., வேட்பாளர்கள் அறிவிப்பு!

மக்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது

சென்னை: மக்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலுக்காக திமுக தலைமையில், காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, ஐ.ஜே.கே., கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை, மதுரை தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில். மக்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, மதுரையில் சு.வெங்கடேசன், கோவையில் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

சாகித்ய அகாடமி விருதுபெற்ற காவல் கோட்டம்  நாவல் மற்றும் புகழ்பெற்ற வேள்பாரி போன்ற நூல்களை எழுதியவர் சு.வெங்கடேசன். கோவை தொகுதியில் போட்டியிடும் பி.ஆர். நடராஜன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், கோவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 

மதுரையை முதன்மை நகரமாக உருவாக்குவோம். வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.