மக்களவை தேர்தல் 2019: நடத்தை விதிமுறைகள் என்ன?

 

மக்களவை தேர்தல் 2019: நடத்தை விதிமுறைகள் என்ன?

மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன

சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

17-வது நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இந்த மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக வேட்பாளர்களின் குற்ற விவரங்களை வெளியிடும்  நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் என்பது என்ன? என்னென்ன விதிமுறைகள் உள்ளன என்பதை பார்க்கலாம்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்ன?

**அரசாங்க ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு இடமாற்றமோ அல்லது பதவி உயர்வோ வழங்கக்கூடாது. ஒருவேளை மாற்றவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற வேண்டும்.

**அரசு விழாக்களில் அமைச்சர்கள், தங்களது கட்சிகளுக்காக வாக்குகள் கோரக் கூடாது. ஏற்கெனவே அமலில் உள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கக்கூடாது. புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லோ அல்லது நிதியோ ஒதுக்கக்கூடாது.

**அரசு வாகனங்கள், அரசு ஊழியர்களை பிரசாரத்துக்கு பயன்படுத்தக்கூடாது.

**வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, வாக்குச் சாவடிக்குச் செல்ல போக்குவரத்து வசதி செய்து தருவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

**தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையெடுத்து மத்திய அரசோ, மாநில அரசோ புதிய திட்டங்களை அறிவிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அது வாக்காளர்களை கவரும் முயற்சியாக கருத்தில் கொள்ளப்படும்.

**பொது மைதானங்களில் பிரசாரக் கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்க கட்சிகள் இடையே பேதம் பார்க்கப்படக் கூடாது.

**தொலைக்காட்சி, கேபிள் நெட்வொர்க், ரேடியோ போன்றவற்றில் பிரச்சார விளம்பரங்களை வெளியிட 3 நாட்களுக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.