மக்களவை தேர்தல் 2019; தமிழகத்தில் 932 வேட்பு மனுக்கள் ஏற்பு – சத்யபிரதா சாஹூ தகவல்!

 

மக்களவை தேர்தல் 2019; தமிழகத்தில் 932 வேட்பு மனுக்கள் ஏற்பு – சத்யபிரதா சாஹூ தகவல்!

தமிழகத்தில் மொத்தம் 1,587 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. 655 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது

சென்னை: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு 932 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் இதனுடன் சேர்த்து நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கியுள்ளன.

kanimozhi nomination

இதனிடையே, இதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு நாளை கடைசி நாள்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, மக்களவை தேர்தலுக்கு தமிழகத்தில் மொத்தம் 1,587 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. 655 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது, 932 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

election commission

மேலும், 18 தொகுதி இடைத்தேர்தலுக்காக 518 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், அதில் 305 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பாக இதுவரை 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த சத்யபிரதா சாஹூ, திமுக மீது 10, அதிமுக மீது 9, பாஜக மீது 2, பாமக மீது 3, மக்கள் நீதி மய்யம் கட்சி மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார். தமிழகத்தில் இதுவரை ரூ 50.70 கோடி ரொக்கம், 223.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க

கணவனை கொன்ற நபரை திட்டமிட்டு கொன்ற மனைவி: பட்டப்பகலில் நடந்த கொடூரம்!