மக்களவை தேர்தல் 2019; கேரளாவில் ராகுல் போட்டி?

 

மக்களவை தேர்தல் 2019; கேரளாவில் ராகுல் போட்டி?

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் கேரள மாநிலத்தில் இருந்து ராகுல்காந்தி போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

திருவனந்தபுரம்: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் கேரள மாநிலத்தில் இருந்து ராகுல்காந்தி போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று அரியணை ஏற பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்த்து வருகின்றனர். இதற்காக தேசிய அளவில் இரு கட்சிகளும் மெகா கூட்டணியை அமைத்து களம் காண்பதால் இந்த தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தவிர, முக்கிய அரசியல் கட்சித் தலைவர் எந்த தொகுதிகளில் களம் காண்கின்றனர் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்ட பிரதமர் மோடி நடப்ப்பு தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ளார். பாஜக வெளியிட்டுள்ள 184 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் வாரணாசி தொகுதியில் இடம் பெற்றுள்ளது. அடுத்த கட்ட வேட்பாளர் பாட்டியலில் அவர் வேறு ஏதேனும் தொகுதியில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

rahul gandhi

அதேபோல், காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், சோனியா ரேபரேலி தொகுதியிலும் போட்டியிவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கோட்டையான அமேதி தொகுதியில் இருந்து ராகுலின் தந்தை ராஜீவ் காந்தி தொடர்ந்து 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல், 2004-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் முதல் முறையாக களம் கண்ட ராகுலும் அமேதியில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார். அதன்பிறகு, 2009, 2014 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அமேதி தொகுதியில் ராகுல் வெற்றி பெற்றுள்ளார்.

smriti irani

கடந்த தேர்தலில் ராகுலுக்கு எதிராக களமிறங்கிய பாஜக-வின் ஸ்மிர்த்தி இராணி மண்ணை கவ்வியதே வரலாறு. இந்த முறையும் அவர் அமேதி தொகுதியில் ராகுலுக்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ளார்.

அதேசமயம், தென்னிந்திய மாநிலங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் ராகுல் காந்தி கூடுதலாக போட்டியிட வேண்டும் என அந்தந்த மாநில முதல்வர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கர்நாடகாவில் போட்டியிட வேண்டுமென்று அம்மாநில காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதப்பட்டது. அவர் போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் மேலும் வலுவடையும் என்று அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி அல்லது சிவகங்கை தொகுதியில் போட்டியிட ராகுலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில், கேரளா மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமசந்திரன், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் கலந்து கொண்ட வேட்பாளர்கள் தேர்வு, பிரசார யுக்திகள், தேர்தலை எதிர்கொள்வது உள்ளிடவைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட ராகுலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராகுலிடம் நேரடியாகவும் அவர்கள் பேசியுள்ளனர்.

kerala congress

ஆனால், அமேதி தொகுதியில் போட்டியிட ஏற்கனவே தான் திட்டமிட்டுள்ளதாலும், வயநாடு தொகுதி பற்றி முழுமையாக தெரியாததால், கேரள மாநில காங்கிரஸாரின் கோரிக்கையை முதலில் ராகுல் நிராகரித்ததாகவும் தெரிகிறது. ஆனாலும், கேரள காங்கிரஸார் ராகுல் கண்டிப்பாக கேரள மாநிலத்தில் இருந்து போட்டியிடுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இருப்பினும், காங்கிரஸ் கட்சி தரப்பில் இதுவரை எந்த உறுதியும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வயநாடு மக்களவைத் தொகுதியில் கடந்த இரண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஷானவாஸ் வெற்றி பெற்றார். அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். எனவே, காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை இந்த தொகுதி முக்கியமான தொகுதியாகும். காங்கிரஸ் கோட்டையான இங்கு வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. ஆனால், தற்போதைய நிலவரப்படி, முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா தலைமையில் கேரள காங்கிரஸ் இரண்டாக பிளவு பட்டு கிடக்கிறது. எனவே, இந்த தொகுதிக்கான வேட்பாளர் தேர்வில் கடும் போட்டி இருக்கக் கூடும் என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் வாசிங்க

நள்ளிரவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் – ஹெச். ராஜா தொகுதிக்கு ஆளில்லை