மக்களவை தேர்தலில் போட்டியில்லை: மாயாவாதி அறிவிப்பு

 

மக்களவை தேர்தலில் போட்டியில்லை: மாயாவாதி அறிவிப்பு

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்

லக்னோ: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. தேசிய அளவில் சில கட்சிகள் தொகுதி பங்கீட்டை முடித்து கூட்டணியை இறுதி செய்துள்ளது. சில கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.

இந்த தேர்தலில் வழக்கம்போலவே நாட்டின் பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேசம் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், அனைவரது பார்வையும் அம்மாநிலத்தின் மீது திரும்பியுள்ளது. அம்மாநிலத்தின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலும், ரேபரேலி தொகுதியில் சோனியாவும் போட்டியிடுகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் எதிரிக் கட்சிகளாக இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் இந்த மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக்தளம் கட்சியும் அங்கம் வகிக்கிறது. தொகுதி பங்கீடு பிரச்னை காரணமாக உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என இந்த இரு கட்சிகளும் அறிவித்துள்ளன. எனினும், அமேதி, ரேபரேலி தொகுதிகளில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எதாவது ஒரு தொகுதியில் நான் வெற்றி பெற்று விடுவேன் என்பது எனக்கு தெரியும். வேட்புமனு தாக்கல் செய்தால் மட்டும் போதும், எனது கட்சியினர் மீதத்தை பார்த்துக் கொள்வர். சமாஜ்வாதி மற்றும் ராஷ்டிரிய லோக்தளம் ஆகிய கட்சிகளுடன் வலுவான கூட்டணியை நாங்கள் அமைத்துள்ளோம். நான் ஒரு தொகுதியில் வெற்றி பெறுவதை விட அதிக தொகுதிகளில் எங்களது கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது தான் முக்கியம். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என நான் முடிவெடுத்திருக்கிறேன் என்றார்.