மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெறுவதில் சிக்கல்

 

மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெறுவதில் சிக்கல்

ஐந்து மாநில தேர்தலில் பாஜக-வுக்கு ஏற்பட்ட பின்னடைவு மக்களவை தேர்தலில் அக்கட்சி பெரும்பான்மை பெறுவதில் சிக்கலை ஏற்படுதியுள்ளது

சென்னை: ஐந்து மாநில தேர்தலில் பாஜக-வுக்கு ஏற்பட்ட பின்னடைவு மக்களவை தேர்தலில் அக்கட்சி பெரும்பான்மை பெறுவதில் சிக்கலை ஏற்படுதியுள்ளது.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மிசோரம், தெலங்கானா, சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதில், தெலங்கானா மாநிலத்தில் பெரும்பான்மை பலத்துடன் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக-விடம் இருந்து ஆட்சியை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரமில் காங்கிரசிடம் இருந்து மிசோ தேசிய முன்னணி ஆட்சியை பறித்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் இழுபறி நிலவி வந்த நிலையில், காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளிலும், பாஜக 109 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 1, பகுஜன் சமாஜ்வாதி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் அங்கு உருவெடுத்துள்ள போதிலும், ஆட்சி அமைக்க தேவையான 116 தொகுதிகள் இல்லாததால், பிற கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் அங்கு ஆட்சியமைக்கவுள்ளது.

congress

தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற பெரிதும் உதவிகரமாக இருந்த மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில தேர்தல் முடிவுகள், அடுத்து வரவுள்ள மக்களவை தேர்தலில் அக்கட்சி பெரும்பான்மை பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் மொத்தம் 29 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 27 இடங்களை பாஜகவும், 2 இடங்களை காங்கிரஸ் கட்சியும் கைப்பற்றியது. ஆனால், தற்போது சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்றுள்ள வாக்கு சதவீத அடிப்படையில் கணக்கிட்டால் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக 17 தொகுதிகளிலும், காங்கிரஸ் 12 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

modiamitshah

ராஜஸ்தானில் கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 25 இடங்களை பாஜக கைபற்றியது. ஆனால், தற்போதைய நிலவரப்படி பார்த்தால், அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக 13 தொகுதிகளிலும், காங்கிரஸ் 12 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 11 தொகுதிகளில் கடந்த மக்களவை தேர்தலில் பாஜக 10 இடங்களிலும் காங்கிரஸ் 1 இடத்திலும் வென்றன. ஆனால், தற்போதைய நிலவரப்படி பார்த்தால், அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக 1 தொகுதியிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

rahulgandhi

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையான 277 இடங்களை பெற இந்த மூன்று மாநிலங்களில் உள்ள 65 தொகுதிகள் முக்கிய பங்கு வகித்தன. ஆனால், தற்போதைய நிலையே வருகிற மக்களவை தேர்தலிலும் நீடித்தால், இந்த மூன்று மாநிலங்களில் 31 தொகுதிகளே பாஜக-வுக்கு கிடைக்கும். அதேசமயம், இந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை பெற்றதை விட பெரும்பான்மையான இடங்கள் கிடைக்கும். மேலும், பிற மாநிலங்களிலும் ஒப்பிட்டு பார்த்தல், மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெறவும், மீண்டும் ஆட்சி அமைக்கவும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.