மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி?

 

மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி?

யாருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்பது கூட இல்லை, தீமை செய்யாமல் இருந்தாலே போதும்.

நாம் ஒருவருக்கு உதவி செய்யவில்லை என்றாலும் கெடுதல் செய்யாமல் இருந்தாலே போதும். இதே அறிவுரையை யாராவது உங்களிடம் சொல்லி இருப்பார்கள், இல்லாவிட்டால் நீங்களாவது யாரிடமாவது கூறி இருப்பீர்கள். இந்த சிந்தனை இன்று நேற்று தோன்றியதல்ல. நம்மால் நல்லது செய்ய முடியாமல் போனாலும் பரவாயில்லை. கெடுதல் செய்யாமல் இருக்கும் குணத்தையாவது பெற்று இருக்க வேண்டும். அந்தச் செயல் தான் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தருவது. அதுமட்டுமல்ல,நம்மை நல்வழிப்படுத்தும்.. நாம் எல்லோரும் மகிழ்வாக இருக்க வேண்டும் என்று விரும்புவோம். அதற்கு யாருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்பது கூட இல்லை, தீமை செய்யாமல் இருந்தாலே போதும்.

squirrel

ஒரு பெரிய மரத்தில் அணில் ஒன்று தாவி விளையாடிக் கொண்டு இருந்தது. அப்படி தாவி குதித்து விளையாடும் போது தவறி கீழே நின்ற ஒநாயின் மீது விழுந்தது. பசியோடு இருந்த ஓநாய், வாய்க்கு ருசியாய் இருக்கும் அணில் கிடைத்ததும் விட்டுவிடுமா என்ன? அதைத் தன் வாயில் கவ்விச் சாப்பிட முயற்சி செய்தது.  தன்னை விட்டு விடுமாறு அணில் ஓநாயிடம் கெஞ்சியது. 

wolf

அப்போது ஓநாய் , “நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன்னை விட்டு விடுகிறேன்” என்றது. அணிலும், “உன் பிடியில் நான் இருந்தால் எப்படி பதில் சொல்ல முடியும்?” என்று கேட்கவே ஓநாயும் பிடியைத் தளர்த்தியது. உடனே மரத்தில் தாவி ஏறிய அணில், இப்போது உன் கேள்வியைக் கேள்” என்றது. ஓநாய் கேட்டது, “உன்னை விட நான் பலசாலி. ஆனால் என்னை விட மகிழ்ச்சியாக மரத்தில் எப்போதும் ஓடியாடி விளையாடிக் கொண்டு இருக்கிறாயே!  இது எப்படி சாத்தியம்?” என்று கேட்டது. 

“நீ எப்போதும் கொடிய செயல்களையே செய்கிறாய். அதுவே உன் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது. அதனால் உன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. ஆனால் நான் எப்போதும் யாருக்கும் எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை. மரங்களில் தானாகப் பழுத்தப் பழங்களை மட்டுமே சாப்பிட்டு வருகிறேன். அதனால் என் மனதில் எப்போதும் கவலை இல்லை” என்றது அணில். ஆம்… குழந்தைகளே…  எந்த சூழலிலும் நாம் நம்மால் சமூகத்திற்கு நன்மை செய்யமுடியாவிட்டாலும், தீமை செய்யாமல் இருந்தாலே அதுவே மிகப் பெரிய நன்மையாகும். இயன்றவரை நன்மை செய்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தை நம் மனதில் விதைப்போம்