மகாராஷ்டிரா சபாநாயகர் தேர்தல்! பா.ஜ.க. திடீர் பல்டி! காங்கிரசின் நானா படோல் புதிய சபாநாயகர்

 

மகாராஷ்டிரா சபாநாயகர் தேர்தல்! பா.ஜ.க. திடீர் பல்டி! காங்கிரசின் நானா படோல் புதிய சபாநாயகர்

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவையின் புதிய சபாநாயகருக்கான தேர்தல் இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட நிலையில், பா.ஜ.க. தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றது. இதனால் காங்கிரசின் நானா படோல் எந்தவித எதிர்ப்பும் இன்றி புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவை புதிய சபாநாயகர் தேர்தலுக்கான வேட்பு மனு நேற்று தாக்கல் நடந்தது. ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நானா படோல் வேட்பு மனு தாக்கல் செய்தார். பா.ஜ.க. சார்பில் கிசான் கதோர் வேட்பு மனு தாக்கல் செய்தார். நிச்சயம் ஜெயிக்க முடியாது என தெரிந்தும் பா.ஜ.க. தனது வேட்பாளரை நிறுத்தியது சிறு சலசலப்பை ஏற்படுத்தியது. 

கிசான் கதோர்

பா.ஜ.க. போட்டி வேட்பாளரை களம் இறக்கியது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் நேற்று கூறுகையில், ஜனநாயகத்தில் வேட்பாளரை நிறுத்த அவர்களுக்கு உரிமை உள்ளது. ஆனாலும் மகாராஷ்டிராவில் எந்தவித எதிர்ப்பும் இன்றி சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவது மரபு. அந்த மரபு தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.

பா.ஜ.க.

இதற்கிடையே நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் சபாநாயகர் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவே வேட்பு மனுவை வாபஸ் பெறும்படி பா.ஜ.க.விடம் மற்ற கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து சபாநாயகர் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்பு மனுவை பா.ஜ.க. வாபஸ் பெற்றது. 

உத்தவ் தாக்கரே

இன்று காலையில் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் புதிய சபாநாயகராக காங்கிரசின் நானா படோல் எந்தவித எதிர்ப்பும் இன்றி தேர்வு செய்யப்பட்டார். புதிய சபாநாயகராக நானா படோல் தேர்வு செய்யப்பட்டபிறகு முதல்வர் உத்தவ் தாக்கரே கூறுகையில், நானா படோல் விவசாய குடும்பத்திலிருந்து வந்தவர் மற்றும் ஒவ்வொருக்கும் அவர் நியாயம் வழங்குவார் என மிகவும் உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்தார்.