மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம்! தேசியவாத காங்கிரசுக்கு அடித்தது யோகம்! கொடுத்ததை வாங்கி கொண்ட காங்கிரஸ்

 

மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம்! தேசியவாத காங்கிரசுக்கு அடித்தது யோகம்! கொடுத்ததை வாங்கி கொண்ட காங்கிரஸ்

மகாராஷ்டிரா அமைச்சரவையில் அதிகபட்சமாக தேசியவாத காங்கிரசுக்கு 16 இடங்களை ஒதுக்க சிவ சேனா ஒப்புக்கொண்டுள்ளது. அதேசமயம் 12 அமைச்சர் பதவியை காங்கிரஸ் அமைதியாக ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில், சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிவ சேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே கடந்த வியாழக்கிழமையன்று முதல்வராக பதவியேற்று கொண்டார். இதனையடுத்து நேற்று மகாராஷ்டிரா சட்டப்பேரவை கூட்டி தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி வெற்றி பெற்றார்.

உத்தவ் தாக்கரே, சரத் பவார், சோனியா காந்தி

மகாராஷ்டிரா அமைச்சரவை விரைவில் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவையில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடம் கிடைக்கும் என்பது தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர் ஒரு கூறுகையில், கூட்டணி பேச்சுவார்த்தையின் போது சபாநாயகர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து சிவ சேனாவின் பங்கிலிருந்து ஒரு அமைச்சர் பதவியை தேசியவாத காங்கிரசுக்கு கூடுதலாக கொடுக்க அதன் தலைவர் உத்தவ் தாக்கரே ஒப்புக்கொண்டார்.

சிவ சேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்

ஆக, தேசியவாத காங்கிரசுக்கு 16 அமைச்சர்கள் பதவியும், துணை முதல்வர்  பதவியும் கிடைக்கும். 12 அமைச்சர்  மற்றும் சபாநாயகர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சிவ சேனாவுக்கு அமைச்சரவையில் 15 இடங்கள் கிடைக்கும் என தெரிவித்தார். உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்ற போது அவருடன் கூட்டணி சேர்ந்த 6 பேர் மாநில அமைச்சர்களாக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.