மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு திட்டமா?

 

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு திட்டமா?

மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சி அமைக்க சிவசேனா ஆதரவு தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சிவசேனாவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்திருப்பதன் மூலம் மகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவர முயற்சி நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
மகாராஷ்டிரா அரசியலில் நொடிக்கு நொடி திருப்பம் ஏற்பட்டு வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டரை வாரங்கள் ஆனநிலையில் எந்த ஒரு கட்சியும் ஆட்சி அமைக்க அழைக்கும்படி ஆளுநருக்கு கடிதம் அளிக்கவில்லை. இதனால், அதிக இடங்களை பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க வரும்படி ஆளுநர் அழைத்தார். ஆனால் இந்த அழைப்பை பா.ஜ.க நிராகரித்தது. இதைத் தொடர்ந்து சிவசேனாவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது.

bjp

தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவை பெற சிவசேனா முயற்சி செய்தது. இதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறியது.  சிவசேனா அரசுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக காங்கிரஸ் காரியகமிட்டி கூடி விவாதித்தது. ஆனால், இதில் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் வலியுறுத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேரடியாக சோனியாவிடம் போனில் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதில் நம்பிக்கை அளிக்கும் பதில் வரவில்லை என்று தெரிகிறது.

shivsena

இதனால், ஆட்சி அமைக்க கால அவகாசம் வேண்டும் என்று சிவசேனா தரப்பில் ஆளுநரை சந்தித்து கோரிக்கைவிடுக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை ஆளுநர் நிராகரித்துவிட்டார். மேலும் அதிரடியாக, மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். இதனால், சிவசேனா தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ncp

மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சி அமைக்க சிவசேனா ஆதரவு தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிவசேனா முரண்டுபிடித்ததால் பா.ஜ.க-வின் கனவு சிதைந்தது. சிவசேனாவாலும் ஆட்சி அமைக்க முடியாத நிலையை உருவாக்க அரசியல் குழப்பத்தை அரங்கேற்றி அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டுவர பா.ஜ.க முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மகாராஷ்டிராவில் நடக்கும் நிகழ்வுகள் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில் உள்ளது.