மகளிர் உலகக்கோப்பை ஹாக்கி 2018: காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா

 

மகளிர் உலகக்கோப்பை ஹாக்கி 2018: காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா

லண்டன்: மகளிருக்கான உலகக்கோப்பை ஹாக்கி தொடரில், இந்திய அணி 40 ஆண்டுகளுக்கு பிறகு காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

மகளிருக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டங்களில் மோத வேண்டும். லீக் ஆட்டம் முடிவில் தங்கள் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும். அதேபோல், 2-வது மற்றும் 3-வது இடம் பிடிக்கும் அணிகள் மற்ற பிரிவில் உள்ள அணியுடன் நாக்அவுட் சுற்று ஆட்டத்தில் விளையாட வேண்டும். இதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதிக்குள் முன்னேறும்.

இந்நிலையில், லீக் சுற்றில் 3-வது இடத்தைப் பிடித்த இந்திய அணி, நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய போட்டியில் இத்தாலி அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 9வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை லால்ரெம்சியாமி முதல் கோல் அடித்தார். இறுதியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், வெள்ளிக்கிழமை நடைபெறும் காலிறுதியில் அயர்லாந்தை இந்தியா எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.

உலகக் கோப்பை ஹாக்கித் தொடரில், இந்திய அணி 40 ஆண்டுகளுக்கு பிறகு காலிறுதிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.