மகன் துணை முதல்வராக பதவி ஏற்பதை பார்க்க சிறையிலிருந்து வெளியே வந்த அரசியல்வாதி தந்தை

 

மகன் துணை முதல்வராக பதவி ஏற்பதை பார்க்க சிறையிலிருந்து வெளியே வந்த அரசியல்வாதி தந்தை

அரியானாவில் தண்டனை கைதியான அரசியல்வாதி அஜய் சவுதாலா தனது மகன் துணை முதல்வராக பதவி ஏற்பதை பார்ப்பதற்காக சிறையிலிருந்து வெளியே வந்து பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அரியானாவின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா. அவரது மகன் அஜய் சவுதாலா. அவரது மகன்களில் ஒருவர் துஷ்யந்த் சவுதலா. ஓம் பிரகாஷ் சதலாவும், அஜய் சவுதாலாவும் சட்டவிரோதமாக 3,206 இளநிலை ஆசிரியர்களை பணியமர்த்திய வழக்கில் 2013 ஜனவரி முதல் 10 ஆண்டு கால சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர். 

ஓம் பிரகாஷ் சவுதாலா

அரியானாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் அதிக இடங்களை வென்ற பா.ஜ.க.வுக்கு ஜே.ஜே.பி. மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்தனர். இதனையடுத்து நேற்று பா.ஜ.க.வின் மனோகர் லால் கட்டார் தொடர்ந்து இரண்டாவது முறையாக அரியானா முதல்வராக பதவியேற்றார். அவருடன் துணை முதல்வராக ஜே.ஜே.பி. கட்சியின் சட்டமன்ற தலைவர் துஷ்யந்த் சவுதாலாவும் பதவி ஏற்றார்.

துஷ்யந்த் சவுதாலா

தனது மகன் துஷ்யந்த் சவுதாலா முதல்வராக பதவி ஏற்பதை காண்பதற்காக அஜய் சவுதாலா 2 வார பெயிலில் சிறையிலிருந்து நேற்று காலை வெளியே வந்தார். துஷ்யந்த் பதவி ஏற்பு விழாவில் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தார். இது குறித்து அஜய் சவுதாலா கூறுகையில், இது ஒரு தந்தையாக எனக்கு மிக பெரிய பரிசு. இந்த கூட்டணி அரசாங்கம் நிலையாகவும், மாநிலத்தில் மேம்பாட்டையும் கொண்டு வரும். காங்கிரஸ் என்ன சொன்னாலும் அது வாழ்த்துக்கள்தான் என தெரிவித்தார்.