மகனை முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்க படாதபாடு படும் சிவ சேனாவின் உத்தவ் தாக்கரே

 

மகனை முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்க படாதபாடு படும் சிவ சேனாவின் உத்தவ் தாக்கரே

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதற்காக ஒரு வழியை கண்டுபிடிப்போம் என சிவ சேனாவின் உத்தவ் தாக்கரே கூறினார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி பெரும்பான்மை இடங்களை வென்ற போதிலும் பா.ஜ.க.வால் ஆட்சியை அமைக்க முடியவில்லை. முதல்வர் பதவியை சமகாலம் விட்டு கொடுத்தால்தான் ஆட்சி அமைக்க ஆதரவு என சிவ சேனா கூறியதே இதற்கு காரணம். தனது மகன் ஆதித்யா தாக்கரேவை எப்படியேனும் முதல்வர் பதவியில் உட்கார வேண்டும் என்பதில் உத்தவ் தாக்கரே  உறுதியாக இருந்தார். அதேசமயம் பா.ஜ.க.வும் முதல்வர் பதவி காலத்தை விட்டுக்கொடுக்க முன்வரவில்லை. மேலும் புதிய அரசு அமைவதற்கான காலக்கெடுவுக்குள் எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை. இதனையடுத்து அதிக இடங்களை வென்ற பா.ஜ.க. ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைத்தார். ஆனால் பா.ஜ.க. முடியாது என பின்வாங்கி விட்டது.

ஆதித்யா தாக்கரே

இதனையடுத்து சிவ சேனாவுக்கு அம்மாநில கவர்னர் ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் கவர்னர் நிர்ணயித்த காலத்துக்குள் பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கடிதத்தை கவர்னரிடம் சிவ சேனாவால் கொடுக்க முடியவில்லை. இதனையடுத்து, ஆட்சி அமைக்க விருப்பமா, முடியுமா? என தேசியவாத காங்கிரசிடம் கேட்டார். ஆனால் தேசியவாத காங்கிரஸ் கூடுதல் காலஅவகாசம் கேட்டதால் கவர்னர் மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

சிவ சேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்

குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட போதிலும், சிவ சேனா ஆட்சி அமைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களை சந்தித்த போது, வெவ்வேறு சித்தாங்களை கொண்ட கட்சிகளால் இணைந்து செயல்பட முடியுமா என்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நாங்கள் வெவ்வேறு சித்தாங்களை கொண்டவர்கள். ஆனால் காஷ்மீரில் மெகபூபா முப்தியுடன் பா.ஜ.க. இணைந்து செயல்பட்டதை போல், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதற்கான பாதையை நாங்கள் கண்டுபிடிப்போம். புதிய அரசியல் கட்டமைப்பு வாயிலாக நிலையான அரசை எங்களால் அமைக்க முடியும் என சிவ சேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.