ப.சிதம்பரம் போன்று மம்தாவுக்கும் பாடம் கற்பிக்கப்படும்- பா.ஜ. எம்.எல்.ஏ. எச்சரிக்கை

 

ப.சிதம்பரம் போன்று மம்தாவுக்கும் பாடம் கற்பிக்கப்படும்- பா.ஜ. எம்.எல்.ஏ. எச்சரிக்கை

தேச விரோத நடவடிக்கையால் செல்வாக்கு பெற்றால் ப.சிதம்பரம் போன்று மம்தாவுக்கும் பாடம் கற்பிக்கப்படும் என உத்தர பிரதேச பா.ஜ. எம்.எல்.ஏ. எச்சரிக்கை செய்தார்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்க தேசத்தவர்களை கண்டறிய தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியலை தயார் செய்யும் பணிகளில் மத்திய அரசு மேற்கொண்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 19 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். குடியுரிமை இல்லாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவது  உறுதி என அமித் ஷா  கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறினார். தேசிய குடிமக்கள் பதிவேடு மணிப்பூர் உள்பட மேலும் சில மாநிலங்களில் செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியானது.

அமித் ஷா

இந்நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இல்லாத நீண்ட காலமாக வாழும் மக்களை நாட்டை விட்டு வெளியேற்றும் மத்திய அரசின் முடிவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் மேற்கு வங்கத்தில் ஒருவரையாவது தொட்டுப் பாருங்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் நெருப்போடு விளையாட வேண்டாம் என சவால் விடுத்து இருந்தார்.

சுரேந்திர சிங்

மம்தாவின் இந்த பேச்சுக்கு உத்தர பிரதேச பல்லியா தொகுதி பா.ஜ. எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் பதிலடி கொடுத்துள்ளார். சுரேந்திர சிங் இது குறித்து கூறுகையில், மம்தா பானர்ஜி ஒரு இந்தியர் அதனால் அவர் இங்கு இருக்கலாம். ஆனால் தேச விரோத நடவடிக்கைகள் வாயிலாக அவர் செல்வாக்கு பெற்றால், ப.சிதம்பரம் உள்ளிட்டவர்களுக்கு பாடம் கற்பித்தது போல் அவருக்கும் பாடம் கற்பிக்கப்படும் என எச்சரிக்கை செய்தார்.

என்.ஆர்.சி.

ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, தற்போது திஹார் சிறையில் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.