ப.சிதம்பரம் கைதுக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்….

 

ப.சிதம்பரம் கைதுக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்….

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், முன்ஜாமீன் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் டெல்லி நீதிமன்றம் அவருடைய மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் அந்த மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும் வெள்ளிக்கிழமை (இன்று) விசாரிக்கப்படும் என கடந்த புதன்கிழமையன்று கூறியது.

இதனையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு ப.சிதம்பரத்தை கைது செய்தனர். மேலும் நேற்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்காக 5 நாள் காவலில் எடுக்க சி.பி.ஐ. அனுமதி கேட்டது. இம்மாதம் 26ம் தேதி வரை ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. 

இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில், பானுமதி மற்றும் ஏ.எஸ். போபண்ணா அமர்வு முன்  சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. கைது செய்துவிட்டதால் முன்ஜாமீன் மனு மதிப்பு இழந்து விடுகிறது. இதனால் சி.பி.ஐ.யின் கைது நடவடிக்கை எதிர்த்தும், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்யாமல் இருக்க சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவும் விசாரிக்கப்பட்டது.

இரண்டு வழக்குகள் தொடர்பாக இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், ஆகஸ்ட் 26ம் தேதி வரை சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய இடைக்காலத் தடை வழங்கியது. மேலும் இந்த இரு வழக்குகள் தொடர்பான விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.