ப.சிதம்பரத்துக்கு ஆப்பு வைத்த இந்திராணியின் வாக்குமூலம்….

 

ப.சிதம்பரத்துக்கு ஆப்பு வைத்த இந்திராணியின் வாக்குமூலம்….

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அப்ரூவராக மாறிய இந்திராணியின் வாக்குமூலம்தான் ப.சிதம்பரத்தின் கைதுக்கு முக்கிய காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

ப.சிதம்பரத்துக்கு ஆப்பு வைத்த இந்திராணியின் வாக்குமூலம்….

ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த காலத்தில், பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி நடத்தி வந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் ரூ.305 கோடி அன்னிய நேரடி முதலீட்டை பெற்றது. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டிலிருந்து முதலீடு பெற அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் சட்டவிரோதமாக  அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா இயக்குனர்கள் பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

நீண்ட காலமாக விசாரணைக்கு ஆஜராகமால் தப்பித்து வந்த ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. நேற்று கைது செய்தது. இந்த கைதுக்கு முக்கிய காரணமே இந்திராணியின் வாக்குமூலம்தான் என தற்போது தெரியவந்துள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி 2018 பிப்ரவரி 17ம் தேதியன்று சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையிடம் வாக்குமூலம் அளித்தார். அதில், அன்னிய முதலீடு பெறுவது தொடர்பாக சிதம்பரத்தை 2006ல் அவரது வடக்கு ப்ளாக் அலுவலகத்தில் சந்தித்தோம். அப்போது இது தொடர்பாக தன் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் வர்த்தகத்துக்கு உதவும்படியும், இது தொடர்பாக அவரை பார்க்கும் படி கூறினார்.

டெல்லியில் உள்ள ஹயத் ஹோட்டலில் கார்த்திக் சிதம்பரத்தை சந்தித்து பேசினோம். அப்போது அவர் 10 லட்சம் டாலர் லஞ்சம் கேட்டார். இதனையடுத்து கார்த்தி சிதம்பரத்தின் ஏ.எஸ்.சி.பி.எல். நிறுவனத்துக்க பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ஐ.என்.எக்ஸ். நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கியது என கூறியிருந்தார்.

இந்திராணி இந்த வழக்கில் அப்ரூவராக மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்திராணியின் வாக்குமூலம்தான் தற்போது ப.சிதம்பரம் கைது நடவடிக்கைக்கு வழிவகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.