போஸ்னியாவில் மெகா கோடீஸ்வரர் லெட்சுமி மிட்டலின் சகோதரர் கைது!

 

போஸ்னியாவில் மெகா கோடீஸ்வரர் லெட்சுமி மிட்டலின் சகோதரர் கைது!

போஸ்னியாவில் மெகா கோடீஸ்வரர் லெட்சுமி மிட்டலின் இளைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஸ்டீல் துறையின் சக்கரவர்த்தியாக திகழும் மெகா கோடீஸ்வரர் லெட்சுமி மிட்டல். இவரது இளைய சகோதரர் பிரமோத் மிட்டல். 2003ம் ஆண்டில் போஸ்னியாவின் வடகிழக்கு பகுதியில் நகரமான லுகாவாக்கில் குளோபல் இஸ்பட் கோக்ஸ்னா இன்டஸ்ட்ரிஜா லுகாவாக் (gikil) என்ற  கோக்கிங் ஆலை தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் சுமார் ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

லெட்சுமி மிட்டல்

பிரமோத் மிட்டலின் குளோபல் ஸ்டீல் ஹோல்டிங் மற்றும் உள்ளூர் நிறுவனமான கே.எச்.கே. இணை நிர்வாகம் செய்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆலையில் மோசடி ஈடுபட்டது மற்றும் அலுவலகம் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் போஸ்னியாவில் பிரமோத் மிட்டலை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தகவலை வழக்கறிஞரும் உறுதி செய்துள்ளார்.

கோக்கிங் ஆலை

 

பிரமோத் மிட்டலை தவிர, அந்நிறுவனத்தின் பொது மேலாளர் பிரமேஷ் பட்டாசார்யா மற்றம் கண்காணிப்பு வாரியத்தின் உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.  போஸ்னியாவின் நம்பர் ஒன் ஏற்றுமதி நிறுவனங்ளில் ஒன்று gikil என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிறுவனத்தில் கடந்த 2003ம் ஆண்டு முதல் பிரமோத் மிட்டல் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் அலுவலகம் மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருவதாக வழக்கு தொடரப்பட்டதாக தெரிகிறது. அந்த வழக்கின் அடிப்படையில்தான் இன்று போஸ்னியாவில் பிரமோத் மிட்டல் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரமோத் மிட்டல் மீதான குற்றச்சாட்டு உறுதியானால் அவருக்கு 45 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரமோத் மிட்டல் கைது குறித்து அவருடைய நிறுவனம் இதுவரை எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.