போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மரணம்: அடித்து கொல்லப்பட்டாரா?

 

போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மரணம்: அடித்து கொல்லப்பட்டாரா?

சென்னையில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை : சென்னையில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடியில்  பிவி காலனியை சேர்ந்த 27 வயதான கார்த்திக் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு கூட்டாளிகளுடன்  கத்தியுடன் சுற்றித் திரிந்த கார்த்திகை பிடித்த மகாகவி பாரதியார் நகர் போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தலைமறைவாக இருந்த கார்த்திக் சென்னை வந்தது தெரிந்தவுடன் அவரை விசாரணை செய்ய அழைத்து வந்ததாகவும், அப்போது அவர் மதுப்போதையில் இருந்ததால் உடல் நிலை சரியில்லாமல் இறந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் அதை ஏற்க மறுத்த கார்த்திக்கின் உறவினர்கள் நீண்ட நேரம் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து 50க்கும் மேற்பட்ட போலீசார் ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். 

கார்த்திக்கின் உடல் இன்று பரிசோதனை செய்யப்பட உள்ளது. பிரேத பரிசோதனை முடிவுக்குப் பிறகே அவர் போலீசார் தாக்கியதால் பலியானாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியவரும். இந்தச் சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.