போபர்ஸ் ஊழல் வழக்கு: மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

 

போபர்ஸ் ஊழல் வழக்கு: மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

போபர்ஸ் ஊழல் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

டெல்லி: போபர்ஸ் ஊழல் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஸ்வீடன் நாட்டிலிருந்து இந்திய ராணுவத்துக்கு 400 பீரங்கிகளை வாங்க, கடந்த 1986-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, அந்நாட்டின் ஆயுதத் தயாரிப்பு நிறுவனமான போபர்ஸ் நிறுவனத்துடன் அதே ஆண்டு மார்ச் 24-ம் தேதி ரூ.1,437 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.

இதையடுத்து, போபர்ஸ் ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக, இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு சுமார் ரூ.64 கோடி அளவில் லஞ்சம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை இந்த குற்றச்சாட்டு ஏற்படுத்தியது. இந்த ஊழல் முறைகேட்டில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் தொடர்பிருப்பதாக அரசியல் களத்தில் பரபரப்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.  டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் இருந்து முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விடுவித்து டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2004-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட போபர்ஸ் நிறுவனம், ஹிந்துஜா சகோதரர்கள் உள்ளிட்ட அனைவர் மீதான குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்து டெல்லி உயர் நீதிமன்றம் 2005-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால், இந்தத் தீர்ப்புக்கு எதிராக சிபிஐ அப்போது மேல்முறையீடு செய்யவில்லை.

இந்நிலையில், போபர்ஸ் பீரங்கிகள் வாங்கியது தொடர்பாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கைகளை நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவின் துணைக் குழு அண்மையில் ஆய்வு செய்தது. அப்போது போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க விரும்புவதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சிபிஐ தாக்கல் செய்த இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது.