போன மாசம் மட்டும் 17.50 லட்சம் வாகனங்கள் விற்பனை…. ஆனாலும் விற்பனை கம்மியாம்…..கண்ணை கசக்கும் ஆட்டோமொபைல் டீலர்ஸ்…

 

போன மாசம் மட்டும் 17.50 லட்சம் வாகனங்கள் விற்பனை…. ஆனாலும் விற்பனை கம்மியாம்…..கண்ணை கசக்கும் ஆட்டோமொபைல் டீலர்ஸ்…

நம் நாட்டில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் பைக், கார் உள்பட மொத்தம் 17.50 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. இருப்பினும் 2019 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது சென்ற மாதத்தில் வாகன விற்பனை 7 சதவீதம் குறைந்துள்ளதாக ஆட்டோமொபைல் டீலர்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஆட்டோமொபைல் டீலர்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பு நாட்டிலுள்ள 1,432 ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் 1,223 அலுவலகங்களில் கடந்த மாதம் நடைபெற்ற வாகன பதிவு விவரங்களை திரட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, கடந்த ஜனவரி மாதத்தில் பைக்,கார்,ஆட்டோ, வர்த்தக வாகனங்கள் உள்பட மொத்தம் 17.50 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. இது 2019 ஜனவரி மாதத்தைக் காட்டிலும் 7.17 சதவீதம் குறைவாகும். அந்த மாதத்தில் மொத்தம் 18.85 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது.

வர்த்தக வாகனங்கள்

மொத்த வாகன விற்பனையில், பைக், ஸ்கூட்டர் ஆகிய இரு சக்கர வாகனங்கள் விற்பனை 8.82 சதவீதம் குறைந்து 12.67 லட்சம் வாகனங்களாக குறைந்துள்ளது. பயணிகள் வாகனங்கள் விற்பனை 4.61 சதவீதம் சரிந்து 2.90 லட்சமாக வீழ்ச்சி கண்டுள்ளது. வர்த்தக வாகனங்கள் விற்பனை 6.89 சதவீதம் வீழ்ச்சி கண்டு 82,187ஆக குறைந்துள்ளது.

பைக்குகள்

அதேவேளையில் 3 சக்கர வாகனங்கள் விற்பனை மட்டும் 9.17 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த மாதத்தில் மொத்தம் 63,514 மூன்று சக்கர  வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. கடந்த ஆண்டில் பெரும்பாலான மாதங்களில் வாகன விற்பனை மிகவும் மோசமாக இருந்தது. இந்நிலையில் 2020ம் ஆண்டாவது நன்றாக அமையும் என எதிர்பார்ப்பில் இருந்த வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடந்த மாத வாகன விற்பனை நிலவரம் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.