போதைக்காக மெத்தனால் குடித்ததில் மேலும் 2 பேர் உயிரிழப்பு!

 

போதைக்காக மெத்தனால் குடித்ததில் மேலும் 2 பேர் உயிரிழப்பு!

அங்காடிகள் உள்ளிட்டவை குறிப்பிட்ட கட்டுப்பாட்டுடன் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே திறந்துவைக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் அங்காடிகள் உள்ளிட்டவை குறிப்பிட்ட கட்டுப்பாட்டுடன் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே திறந்துவைக்கப்பட்டுள்ளது.

 

இதை தவிர்த்து மற்ற நேரங்களில் வெளியில் சுற்றி திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இதுதவிர ஊரடங்கால் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் பலர் மதுபானம் இல்லாத விரக்தியில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.  

 

ஏற்கனவே  புதுக்கோட்டை  கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த அருண்பாண்டி, அசன்மைதீன் ஆகியோர் மது கிடைக்காததால் சேவிங் லோஷனை குடித்து உயிரிழந்தனர். செங்கல்பட்டை சேர்ந்த  சிவசங்கர், பிரதீப், சிவராமன்  ஆகிய மூவரும் கூல்ட்ரிங்ஸில்  ஷேவிங் லோஷனை கலந்து குடித்து பலியானார்கள்.அதேபோல்  கோவை சூலூரை சேர்ந்த பெர்னாடஸ் என்ற சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர் ஒருவர் மதுகிடைக்காத விரக்தியில்  சானிடைசரை நீரில் கலந்துகுடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

 

இந்நிலையில் கடலூர் மாவட்டம்  ஆலப்பாக்கத்தில் போதைக்காக மெத்தனால் குடித்ததில் மேலும் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஏற்கனவே இங்கு சந்திரகாஸ் என்பவர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாயக்கிருஷ்ணன், சுந்தர் ஆகியோர் பலியாகியுள்ளார்கள். 

இதனிடையே கள்ளச்சாராயம்  மற்றும் தடை செய்யப்பட்ட போதைபொருட்களை  பயன்படுத்தினால்  அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ்ஸ்ரீ எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.