போட்டி போட்டு விவசாய கடன்களை தள்ளுபடி செய்த மாநிலங்கள்….. பரிதாப நிலையில் பொதுத்துறை வங்கிகள்….

 

போட்டி போட்டு விவசாய கடன்களை தள்ளுபடி செய்த மாநிலங்கள்….. பரிதாப நிலையில் பொதுத்துறை வங்கிகள்….

தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் விவசாய கடனை தள்ளுபடி செய்ததால், கடந்த டிசம்பர் காலாண்டில் எஸ்.பி.ஐ. உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக் கடன் ரூ.60,762 கோடி அதிகரித்துள்ளது.

பொதுத்துறை வங்கிகள் இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்) தங்களது வாராக் கடனை குறைத்தன. மேலும் தங்களது நிதி செயல்திறன் மேம்பட்டுள்ளதாக அறிக்கை  அளித்தன. இதனால் வங்கிகள் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விட்டன என நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் அந்த நம்பிக்கையை பொசுக்கும் வகையில், வங்கிகளின் மொத்த வாராக் கடன் அதிகரித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வறட்சியால் விவசாயிகள் பாதிப்பு

உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மற்றும் பஞ்சாப் மாநில அரசுகள் தள்ளுபடி செய்த விவசாய கடன்களால், இந்த நிதியாண்டின் 3வது காலாண்டில் (2019 அக்டோபர்-டிசம்பர்) எஸ்.பி.ஐ., பஞ்சாய் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா மற்றும் பேங்க் ஆப் இந்தியா ஆகிய 4 பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக் கடன் ஒட்டு மொத்த அளவில் ரூ.60,762 கோடி அதிகரித்துள்ளது. குறிப்பாக விவசாய வாராக் கடன் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டேட் வங்கி

தீவான் ஹவுசிங், கபே காபி டே, காக்ஸ் அண்டு கிங்ஸ், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் மற்றும் சுஸ்லான் ஆகிய சிக்கலான கணக்குகள் வங்கிகளுக்கு தொடர்ந்து கவலையை சேர்த்துள்ளன. இந்நிலையில் தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்ட சிக்கல்களால் (சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் விவகாரம்) எதிர்காலத்தில் வாராக் கடன் சுமையை மேலும் அதிகரிக்கலாம் என்ற சந்தேகம் வங்கிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.