பொள்ளாச்சி விவகாரம்; அதிமுக பிரமுகர் அதிரடி நீக்கம்!

 

பொள்ளாச்சி விவகாரம்; அதிமுக பிரமுகர் அதிரடி நீக்கம்!

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் நாகராஜன், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்

சென்னை: பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் நாகராஜன், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களை பொள்ளாச்சியில் ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது. இது தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன்ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதலில் தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசு, இந்த விவகாரத்தில் அரசியல் தொடர்புகள் உள்ளன. விரைவில் உண்மையைச் சொல்வேன் என வீடியோ வெளியிட்டது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதில், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும் என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியுள்ளன.

இந்த விவகாரத்தில் புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனை, சிலர் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக, பெண்ணின் அண்ணனை மிரட்டியதாக செந்தில் (33), பாபு (26), வசந்தகுமார் (20), நாகராஜ் (26) ஆகிய நான்கு பேரைக் கைது செய்தது போலீஸ். இதில் நாகராஜ் பொள்ளாச்சி 34-வது வட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர். தாக்குதல் புகாரில் கைதான நான்கு பேருமே மூன்று நாள்களில் ஜாமீனில் வெளிவந்து விட்டனர்.

இந்நிலையில், அதிமுக பிரமுகர் நாகராஜ் என்பவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.