பொள்ளாச்சி பாலியல் வழக்கு; திமுக மீது பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு!

 

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; திமுக மீது பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அதிமுக-வுக்கு அவப்பெயரை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது என பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அதிமுக-வுக்கு அவப்பெயரை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது என பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களை பொள்ளாச்சியில் ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது. இது தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன்ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும் என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியுள்ளன. மேலும், இந்த சம்பவத்தில் பொள்ளாச்சி ஜெயராமனின் இரண்டு மகன்களுக்கும் தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அதிமுக-வுக்கு அவப்பெயரை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது என பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் என்னை பற்றி தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். அதிமுக-வுக்கு அவப்பெயரை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது.

என் மீது பரப்பப்படும் அவதூறு தொடர்பாக டிஜிபியிடம் புகார் அளிக்க உள்ளேன். பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை அதிமுக பாதுகாக்கவில்லை. அவர்களை தண்டிக்கவே விரும்புகிறது. தவறு செய்தார் என்றவுடனே கட்சியிலிருந்து ஒருவரை நீக்கியுள்ளோம் என்றார்.

முன்னதாக, புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனை தாக்கியதாக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்த நாகராஜன் என்பவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.