பொள்ளாச்சியை போல் கொண்டாட்டம்; பெண்கள் உள்பட 160 பேர் கைது!

 

பொள்ளாச்சியை போல் கொண்டாட்டம்; பெண்கள் உள்பட 160 பேர் கைது!

சமூக வலைத்தளம் மூலம் ஆட்களை சேர்த்து, மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட இதர போதை பொருட்களை உபயோகித்து இரவு முழுவதும் ரகளையில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் இரு தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டனர்

காஞ்சிபுரம்: பொள்ளாச்சியை போல் மது மற்றும் போதை பொருள் விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக பெண்கள் உள்பட 160 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடை பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த ரிசார்ட்டில், சமூக வலைத்தளம் மூலம் ஆட்களை சேர்த்து, மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட இதர போதை பொருட்களை உபயோகித்து இரவு முழுவதும் ரகளையில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் இரு தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் கணேசன் என்பவருக்கு சொந்தமான அந்த ரிசார்ட்டுக்கும் சீல் வைக்கப்பட்டது.

pollachi party

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலிபுரம் அருகே பட்டிபுலத்தில் உள்ள சொகுசு விடுதியில் மது மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான கஞ்சா உள்ளிட்ட போதை விருந்து நடைபெறுவதாக காவல்துறை உயர் அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

pattipulam

தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற, காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு காவல் கண்காணிப்பாளரும், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருமான பொன்னி தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் விடுதியை சுற்றி வளைத்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, மது மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா விருந்து நடைபெற்றது தெரியவந்ததையடுத்து, அதில் பங்கேற்ற 7 பெண்கள் உள்பட 160 பேரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் அவர்களது உடைமைகள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் அவர்களிடம் இருந்த போதை பொருட்களையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் என்பதும், போதை விருந்தில் கலந்து கொள்ள ஆன்லைன் மூலம் அவர்கள் முன்பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.