பொருளாதாரம் மந்த நிலையில் இருந்த போதும் தங்கம் மட்டும் ரூ.1.63 லட்சம் கோடிக்கு இறக்குமதி…

 

பொருளாதாரம் மந்த நிலையில் இருந்த போதும் தங்கம் மட்டும் ரூ.1.63 லட்சம் கோடிக்கு இறக்குமதி…

நாட்டின் பொருளாதாரம் மந்தகதியில் இருந்து வரும் நிலையிலும், கடந்த டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் ரூ.1.63 லட்சம் கோடிக்கு தங்கம் இறக்குமதியாகி உள்ளது.

நம் நாட்டில் தங்கம் உற்பத்தி பெயரளவுக்கு உள்ளது. அதனால் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய வெளிநாடுகளிலிருந்து தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு சராசரியாக 800 முதல் 900 டன் வரை தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் தங்கம் இறக்குமதியில் சீனாவும், நம் நாடும் முன்னணியில் உள்ளது.

தங்க ஆபரணங்கள்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தகதியில் இருந்தபோதும், 2019 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ரூ.1.63 லட்சம் கோடிக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் (2018) இதே காலத்தை காட்டிலும் சுமார் 7 சதவீதம் குறைந்துள்ளது. 2018 ஏப்ரல்-டிசம்பர் காலத்தில் ரூ.1.75 லட்சம் கோடிக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது. தங்கம் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்தது ஆகியவற்றால் தங்கம் இறக்குமதி குறைந்ததாக கூறப்படுகிறது.

தங்க பிஸ்கட்

தற்போது இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீது 12.5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. தங்கம் இறக்குமதி குறைந்ததால் கடந்த டிசம்பர் வரையிலான 9 மாத காலத்தில் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை ரூ.8.37 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. அதேசமயம் இதே காலத்தில் நம் நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 6.4 சதவீதம் குறைந்து ரூ.1.98 லட்சம் கோடியாக சரிந்தது.