பொருளாதாரம் நிலைமை குறித்து முதன்முறையாக அரசு தரப்பிலிருந்தே வெளிப்படை எச்சரிக்கை!

 

பொருளாதாரம் நிலைமை குறித்து முதன்முறையாக அரசு தரப்பிலிருந்தே வெளிப்படை எச்சரிக்கை!

”இந்தியாவின் பொருளாதாரம் சற்றே தடுமாறுவதாக தெரிகிறதே” பொருளாதார விவகாரங்கள் குறித்து எழுதும் செய்தியாளர்களின் கேள்வி. பதில்? உங்கள் மீடியா விலைபோய்விட்டது. ”கடந்த 20 காலாண்டுகளாக தொடர்ந்து பொருளாதாரம் சரிந்து வருகிறது, அரசு உடனே இதனை கவனத்தில் கொள்ளவேண்டும்” – எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு. விளக்கம்: காழ்ப்புணர்ச்சியால் அப்படி சொல்கிறார்கள். ”இந்தியாவின் பொருளாதாரம் சற்றே கவலைக்குரியதாக உள்ளது” – பொருளாதார அறிஞர்கள். பதில்: யூ ஆர் ஆண்டி-இந்தியன். ”கடந்த 70 ஆண்டுகளில் இந்தியா இந்தமாதிரியான பொருளாதார தேக்க நிலையை சந்தித்ததில்லை. முற்றிலும் புதிய தீர்வு உடனடியாக காணப்படாவிட்டால், நிலைமை கைமீறிவிடும்” – நிதி ஆயோக் துணைத் தலைவர். பதில்: என்னது, நிதி ஆயோக் துணைத்தலைவரே அப்படி சொல்லியிருக்கிறாரா, ம்ம்ம், ஆங்… சிதம்பரம் கைது செய்யப்பட்டுவிட்டார்.
 

ஆக மக்களே, இந்திய பொருளாதாரம் சரிந்துவருகிறது என்பதை ரிசர்வ் வங்கி கவர்னர் பட்டும்படாமல் சொன்னதை, தேங்காய் உடைப்பதை போல் உடைத்து சொல்லிவிட்டார் நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜிவ் குமார். ஒரு பிரச்னைக்கு தீர்வு வேண்டுமென்றால், முதலில் பிரச்னை இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும், பிறகு தீர்வை நோக்கி செல்லவேண்டும். பொருளாதார நெருக்கடி எனும் பட்டாசுக்கு நெருப்பு பற்ற வைத்தாயிற்று. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். ஆனால், காஷ்மீர் விவகாரம், சிதம்பரம் கைது என தூரத்தில் சிறுவர்கள் சுற்றும் கம்பிமத்தாப்பை காட்டி கவனத்தை திசைதிருப்ப பார்க்கிறது அரசு. வேண்டுமானால் எல்லா மாநில அரசுகளையும் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்திக்கொள்ளுங்கள். எல்லா எதிர்கட்சியினரையும் சிறையில் அடைத்துவிடுங்கள். ஆனால், அதன்பிறகாவது உடனடியாக பொருளாதாரத்தில் கவனம் செலுத்துங்கள். செலுத்துவீர்களா? நீங்கள் செலுத்துவீர்களா?