பொய் சாட்சி சொன்ன தாழம்பூ… சிவபெருமான் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா..!

 

பொய் சாட்சி சொன்ன தாழம்பூ… சிவபெருமான் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா..!

‘நான் தான் பெரியவன்… இல்லையில்லை நான் தான் பெரியவன்.. நான் செய்வது தான் சரி’ என்கிற மோதல் அண்ணன், தம்பிகளுக்கிடையே மட்டுமில்லை… உலகம் முழுக்க கணவன், மனைவியிடையே, நண்பர்களிடையே, அலுவலகத்தில் சக பணியாளர்களிடையே என்று எல்லா இடங்களிலும் இருக்கிறது. இவ்வளவு ஏன்… கடவுள்களிடையே கூட இந்த சர்ச்சை எழுந்துள்ளது

‘நான் தான் பெரியவன்… இல்லையில்லை நான் தான் பெரியவன்.. நான் செய்வது தான் சரி’ என்கிற மோதல் அண்ணன், தம்பிகளுக்கிடையே மட்டுமில்லை… உலகம் முழுக்க கணவன், மனைவியிடையே, நண்பர்களிடையே, அலுவலகத்தில் சக பணியாளர்களிடையே என்று எல்லா இடங்களிலும் இருக்கிறது. இவ்வளவு ஏன்… கடவுள்களிடையே கூட இந்த சர்ச்சை எழுந்துள்ளது. 

ஒருமுறை உலகத்தைக் காப்பாற்ற, காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும், படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும் போட்டி ஏற்பட்டது. போட்டியின் முடிவில் நான் தான் பெரியவன் என்று இருவரும் மோதிக் கொண்டனர். வாக்குவாதம் முற்றிப் போய் இருவருமே, தீர்ப்பை எதிர்பார்த்து, உலகை அளும் சர்வேஸ்வரனிடம் சரணடைந்தார்கள். 

god

உலகத்தையே கட்டி ஆளும் ஈசனுக்கா இவர்களது அகந்தை தெரியாமல் இருக்கும். இவர்களது வாதங்களைப் பொறுமையாக கேட்டுக் கொண்ட சிவன், மனதுள் சிரித்தப்படியே, ‘உங்கள் இருவரில் யார் பெரியவர் என்று தெரிய வேண்டும் அவ்வளவுதானே.. என் அடியையும், முடியையும் கண்டு வருபவரே பெரியவர்’ என்றார். 

‘நீங்கள் சொல்வதே சரி.. நான் தங்களது அடியைக் காண போகிறேன்’ என்று சொல்லி சிவபெருமானை தொழுது பாதாளத்தை நோக்கி பாய்ந்தார் விஷ்ணு. ‘நான் உங்கள் முடியைக் காண போகிறேன்’ என்று பிரம்மா  அன்னப்பறவையாக அவதாரம் எடுத்து உயர பறந்தார். விஷ்ணு வராக அவதாரம் எடுத்து அடியைக் காண தோண்டிய படியே ஆண்டுக் கணக்கில் சென்றார். 

god

வருடங்கள் உருண்டோடின. காலங்கள் காற்றாக கடந்தன. ஆனால் அடியைக் காண முடியவில்லை. மீண்டும் சிவப்பெருமானிடம் தஞ்சமடைந்த விஷ்ணு தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். நெடுங்காலமாய் பாதாளத்துக்குள் பாய்ந்த  நம்மால் அடியைக் காண முடியவில்லை. பிரம்மா இன்னும் உயர பறக்கிறாரா என்று விஷ்ணு எண்ணினார்.

பிரம்மா அன்னப் பறவையாக உருவெடுத்து பறந்தார்… பறந்தார்..  பறந்து கொண்டே இருந்தார். ஒட்டுமொத்த பறவைகளின் ஆயுளுக்கும் சேர்த்து பறந்தார்… ஆண்டுகள் ஓடின… ஆனாலும் முடியைக் காண வழியில்லை. மேலும் சில ஆண்டுகள் கழிந்தது. மேலிருந்து கீழிறங்கிய தாழம்பூவைக் கண்டதும் அன்னப்பறவை வடிவில் இருந்த பிரம்மாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. நீ எங்கிருந்து வருகிறாய்? என்றார். நான் சிவனின் கூந்தலிலிருந்து வருகிறேன் என்றது. 
‘ஓ அப்படியானால் நான் அவரது முடியை நெருங்கி விட்டேனா’ என்றார் பிரம்மா. 
‘இல்லை… இல்லை.. அதற்கு இன்னும் காலங்கள் செல்ல வேண்டும் .. நான் கீழிறங்கியே ஆண்டுக்கணக்கில் ஆகிறது’ என்றது தாழம்பூ. சோர்ந்துவிட்ட பிரம்மன் தாழம்பூவிடம் உதவி கேட்டார். நான் சிவபெருமானின் முடியைக் கண்டதாக சாட்சி சொல்கிறாயா என்றார். தாழம்பூவும் சரி என்று ஒப்புக்கொண்டது. 

god

சிவப்பெருமானிடம் வந்த பிரம்மா.. ‘ஐயனே நான் தங்களது முடியைக் கண்ணார கண்டு தரிசித்தேன்’ என்றார். ‘அப்படியா?’ என்ற சிவப்பெருமான்.. எப்படி நான் நம்புவது என்றார். நான் பார்த்ததற்கு தங்கள் கூந்தலிலிருந்த தாழம்பூவே சாட்சி.. நாங்கள் இருவரும் தான் கீழே வந்தோம் என்றார். தாழம்பூவும், ஆம்.. அவர் சொல்வது உண்மை தான் என்றது.

சினம் கொண்ட சிவப்பெருமான்… யாரை ஏமாற்றுகிறீர்கள்? நீ எம் முடியையும் காணவில்லை. தாழம்பூவும் உன்னோடு பயணிக்கவில்லை. வழியில் சந்தித்த இருவரும் சித்துவேலை செய்து என்னை ஏமாற்ற முயற்சி செய்கிறீர்கள்.  அதற்கு உங்களுக்கு தண்டனை நிச்சயம் உண்டு…  பிரம்மனே படைக்கும் தொழிலை பாந்தமாக செய்து வந்தாலும் … பொய்  சாட்சி சொல்வதற்கு தூண்டிய உன்னை வழிபட பூலோகத்தில் தனி கோயில்களோ, பூஜைகளோ இருக்காது என்றார். பின் விளைவுகளை அறியாமல் பொய் சாட்சி சொன்ன காரணத்தினால் என் கூந்தலில் குடிகொள்ளும் இடத்தை இந்நிமிடமே நீ இழப்பாய் என்று தாழம்பூவுக்கு சாபமிட்டார் சிவப்பெருமான்.  அதனாலேயே பிரம்மாவுக்கு கோயிலும், தாழம்பூ பூஜைக்கும் இல்லாமல் போயிற்று.

god

ஒரு பொய் சொன்னதற்கே இத்தனை தண்டனை என்றால்.. ஒரு பொய்யை உண்மையாக்க எத்தனை எத்தனை பொய் சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கும் சில மனிதர்களுக்கு இறைவன் மன்றத்தில் என்ன என்ன மாதிரியான தண்டனைகள் காத்திருக்கோ? ஆகையால் குழந்தைகளே… வாழும் காலத்தில், உண்மையை மட்டுமே பேசி வாழ்வோம். 

ஒரு அரிச்சந்திரன் நாடகம் தான் நமக்கெல்லாம் மகாத்வாவைக் கொடுத்தது. உங்களில் யார் வேண்டுமானாலும் மகாத்மாவாக உருவெடுக்கலாம். எந்த காரணத்தை முன்னிட்டும் உண்மையை கைவிடாமல் இருங்கள். வாழ்க்கையில் எல்லா வெற்றிகளும் நிச்சயமாக ஒரு நாள் உங்களை அரவணைக்கும்