பொய்யான தகவல்களை கொடுக்க சொன்ன அருந்ததி ராய்! காவல்நிலையத்தில் புகார் கொடுத்த வக்கீல்…

 

பொய்யான தகவல்களை கொடுக்க சொன்ன அருந்ததி ராய்! காவல்நிலையத்தில் புகார் கொடுத்த வக்கீல்…

தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடர்பாக அதிகாரிகள் வந்து விவரங்களை கேட்கும்போது, பொய்யான தகவல்களை கொடுங்க என மக்களுக்கு அட்வைஸ் செய்த அருந்ததி ராய்க்கு எதிராக காவல் நிலையத்தில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

தேசிய மக்கள்தொகை பதிவேடு என்பது நம் நாட்டில் குடியிருப்போர் தொடர்பான  விவரங்களை பராமரிப்பதுதான். வழக்கமான குடியிருப்பாளரின் விரிவான அடையாளங்களுடன் கூடிய தகவல் தளத்தை உருவாக்குவதே இந்த தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் நோக்கம். கடைசியாக 2015ல் தேசிய மக்கள்தொகை பதிவேடு பதிவு நடந்தது. 2020 ஏப்ரலில் தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடர்பாக கணக்கெடுப்பு மீண்டும் நடைபெற உள்ளது. தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அருந்ததி ராய்

இந்நிலையில்,  நேற்று முன்தினம் டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததி ராய் பேசுகையில், தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு எதிராக போராட வேண்டியது அவசியம் மற்றும் ஒரு திட்டமும் இருக்க வேண்டும். தேசிய மக்கள்தொகை பதிவு அதிகாரிகள் வந்து உங்களிடம் உங்களது பெயர், முகவரி உள்ளிட்ட சுயவிவரங்களை கேட்கும்போது பொய்யான தகவல்களை கொடுங்கள் என மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

டெல்லி காவல் நிலையம்

அருந்ததி ராயின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த சூழ்நிலையில் நேற்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராஜீவ் குமார் ரஞ்சன் என்பவர் அருந்ததி ராய்க்கு எதிராக டெல்லி திலக் மார்க் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். குழப்பதை ஏற்படுத்துவது, அமைதிக்கு குந்தகம், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கம் மற்றும் குற்ற சதி போன்ற குற்றங்களுக்காக இந்திய தண்டனை தட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டங்களின் பல்வேறு பிரிவுகளில் அருந்ததி ராய் மீது புகார்  கொடுத்துள்ளார். இது குறித்து ராஜீவ் குமார் ரஞ்சன் கூறுகையில்,  இந்த விவகாரத்தில் விசாரணை கோரியுள்ளேன் மற்றும் அவர் தண்டிக்கப்பட வேண்டும். இதன் மூலம் அவர் பாடம் கற்பார் மேலும் இது போன்ற கருத்துக்களை மீண்டும் கூற மாட்டார் என தெரிவித்தார்.