பொன் மாணிக்கவேலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு

 

பொன் மாணிக்கவேலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை அதிகாரிகள் 66 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்

புதுதில்லி: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை அதிகாரிகள் 66 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் நடந்த சிலை கடத்தல் தொடர்பான அனைத்து  வழக்குகளையும் விசாரிக்க ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனிப்படை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மீது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டது. அத்துடன்,  பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக அவரை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையில் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதேபோல், அவர் நியமிக்கப்பட்டதில் இருந்து அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றனர்.

தான் சுட்டிக்காட்டும் நபரிடம் மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என பொன்.மாணிக்கவேல் கூறுகிறார். எங்களை சுதந்திரமாக பணி செய்ய பொன்.மாணிக்கவேல் அனுமதிக்கவில்லை. பொய் வழக்கு, பொய் சாட்சியங்களை கைது செய்ய கோரி பொன்.மாணிக்கவேல் மிரட்டுகிறார் என அவர் மீது டி.ஜி.பி. அலுவலகத்திலும் தமிழக காவல்துறை புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பொன் மாணிக்கவேலின் சிறப்பு நியமனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை அதிகாரிகள் 66 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.