பொன்னாருடன் வாக்குவாதம் செய்து வைரல் ஆன எஸ்.பி. யாதிஷ் சந்திரா அதிரடி மாற்றம்: கேரள அரசு உத்தரவு

 

பொன்னாருடன் வாக்குவாதம் செய்து வைரல் ஆன எஸ்.பி. யாதிஷ் சந்திரா அதிரடி மாற்றம்: கேரள அரசு உத்தரவு

சபரிமலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.பி. யாதிஷ் சந்திரா அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பத்தனம்திட்டா: சபரிமலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.பி. யாதிஷ் சந்திரா அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரளா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக ஆர்.எஸ்.எஸ், பாஜக போன்ற இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதேபோல், கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால், பம்பையில் வாகனங்களை நிறுத்தும் இடம் அடித்துச் செல்லப்பட்டது. இந்த இரண்டு காரணங்களினாலையும், சபரிமலைக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 

குறிப்பாக, பக்தர்கள் அனைவரும் தங்களின் சொந்த வாகனத்தில் செல்லாமல் கேரள அரசுப் பேருந்தில் தான் செல்ல வேண்டும் என பத்தனம்திட்டா போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதனை ஒழுங்கு படுத்தும் பணியில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்ற போது நிலக்கல் பகுதியில் அவருடன் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.பி. யாதீஷ் சந்திரா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு அடைப்பு  போராட்டம் நடத்தப்பட்டது. எனினும், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர்  எஸ்.பி., செய்தது சரி தான் என விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில், நிலக்கல் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட புதிய போலீஸ் குழுவை அறிவித்துள்ள கேரள அரசு, எஸ்.பி. யாதீஷ் சந்திராவை வேறு இடத்துக்கு பணியிட மாற்றம் செய்துள்ளது.