பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டத்தை தயார் செய்த சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ்….

 

பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டத்தை தயார் செய்த சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ்….

மகாராஷ்டிராவில் சிவ சேனா தலைமையில் கூட்டணி அரசை அமைப்பதற்காக, பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தை சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இறுதி செய்து விட்டன.

மகாராஷ்டிராவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்ற பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணியில் முதல்வர் பதவி தொடர்பாக பிரச்னை எழுந்ததால் சிவ சேனா கூட்டணியை முறித்து கொண்டது. இதனால் பா.ஜ.க.வால் அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியவில்லை. மேலும், அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி, பா.ஜ.க.வை தொடர்ந்து சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை வரிசையாக ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனாலும் அந்த கட்சிகளால் கவர்னர் நிர்ணயித்த கால அவகாசத்துக்குள் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கடிதத்தை கொடுக்க முடியவில்லை. இதனால் அம்மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு கவர்னர் பரிந்துரை செய்தார். தற்போது அம்மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.

உத்தவ் தாக்கரே

இதற்கிடையே சிவ சேனா தலைமையில் ஆட்சி அமைக்க, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு அளித்தன. மேலும், கூட்டணி ஆட்சி அமைப்பதற்காக பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தை தயார் செய்யும் நடவடிக்கையில் அந்தகட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், 40 பாயிண்ட் அடங்கிய பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தை அவர்கள் இறுதி செய்து விட்டதாகவும், அதனை 3 கட்சிகளின் தலைவர்களிடம் வழங்கபட இருப்பதாகவும் தகவல். இந்த வார இறுதிக்குள் தலைவர்கள் செயல்திட்டம் குறித்து ஆலோசனை செய்து ஒப்புதல் வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 19ம் தேதிக்குள் பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்துக்கான இறுதி ப்ளூபிரிண்ட் கிடைத்து விடும் என தகவல்.

சோனியா காந்தி, சரத் பவார், உத்தவ் தாக்கரே

பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டம் தயாரிக்கும்பணி முடிவடைந்ததையடுத்து, தற்போது ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளுவதில் அவர்களின் கவனம் திரும்பியுள்ளது. சிவ சேனாவுக்கு 16 அமைச்சர்கள், தேசியவாத காங்கிரசுக்கு 14 மற்றும் காங்கிரசுக்கு 12 அமைச்சர்கள் பதவி வழங்கவும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல். சபாநாயகர் பதவி காங்கிரசுக்கு வழங்கவும், துணை சபாநாயகர் பதவி சிவ சேனாவுக்கும் கொடுக்கவும் கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. சட்டமன்ற தலைவர் பதவி தேசியவாத காங்கிரசுக்கும், சட்டமன்ற துணை தலைவர் பதவி சிவ சேனாவுக்கும் என உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்.