பொதுமக்களை பாதுகாக்கும் ஒரே நோக்கோடு சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்: சன் பிக்சர்ஸ் விளக்கம்

 

பொதுமக்களை பாதுகாக்கும் ஒரே நோக்கோடு சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்: சன் பிக்சர்ஸ் விளக்கம்

சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டது தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை: சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டது தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ திரைப்படம் கதை திருட்டு சர்ச்சைகளை கடந்து தீபாவளிக்கு ரிலீசானது. சர்கார் படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூலித்து, கலவையான விமர்சனங்களை பெற்றது.

வில்லியாக நடித்துள்ள வரலக்ஷ்மியின் கதாபாத்திரத்திற்கு வைக்கப்பட்ட கோமளவள்ளி என்ற ஜெயலலிதாவின் இயற்பெயர், தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து விமர்சிக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக-வினர் போராட்டங்களை நடத்தினர்.

ஆகவே, அப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக திரையரங்க உரிமையாளர் சங்கம் ஒப்புதல் அளித்ததையடுத்து, எடிட் செய்யும் பணிகள் முடிந்து மறு தணிக்கை சான்றிதழை சென்சார் போர்டு இன்று பிற்பகல் வழங்கியது.

இந்நிலையில், இதுகுறித்து சர்கார் படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்கார் திரைப்படத்தில் வரும் சில காட்சிகளுக்கு எதிராக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பல திரையரங்குகள் முன் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, அதனால் திரையரங்க உடைமைகளுக்கு சேதம் விளைவித்தனர். அதனைத் தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகிஸ்தர்கள் வேண்டுகோளை ஏற்றுத் திரையரங்குகளுக்கும், திரைப்படம் காண வரும் பொது மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது பாதுகாக்கும் ஒரே நோக்கோடு சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் ஓரிரு காட்சிகள் நீக்கப்பட்டன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.