பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்த் புகைப்படம்: உறுதியான கூட்டணி?!

 

பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்த் புகைப்படம்: உறுதியான கூட்டணி?!

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் அதிமுக பாஜக பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் புகைப்படமும் வைக்கப்பட்டுள்ளது

சென்னை: பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் அதிமுக பாஜக பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் புகைப்படமும் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க, பா.ம.க, என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி என அடுத்தடுத்து கட்சிகளை கூட்டணியில் அ.தி.மு.க இணைத்து கொண்டது. ஆனால் தேமுதிகவுடன் மட்டும் தற்போது வரை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ops

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியபோதும் எந்த பலனும் இல்லை.இதையடுத்து கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேமுதிக நிர்வாகிகளுடன், அதன் பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த நிலையில் சென்னையை அடுத்த வண்டலூரில் இன்று மாலை, அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த கூட்டத்தில், கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தின் மேடையில், விஜயகாந்த் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க- தே.மு.தி.க கூட்டணி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில் விஜயகாந்த் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது இந்த கூட்டணியை உறுதி செய்துள்ளது.

admk ttn

இது குறித்து கருத்து தெரிவித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தே.மு.தி.க தலைவர்கள் என்னை சந்திக்க உள்ளார்கள் என்றும் அதிமுக கூட்டணியில் தே.மு.தி.க இணையும் என்றும் தெரிவித்தார். இதனிடையே, தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க அ.தி.மு.க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக அ.தி.மு.க, பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெறவிருக்கும், இந்த பொதுக்கூட்டத்திற்கான அழைப்பிதழில் விஜயகாந்த் பெயர் இடம் பெறவில்லை. ஆனால்  தற்போது விழா மேடையில் விஜயகாந்த் புகைப்படம் வைக்கப்பட்டிருப்பது கூட்டணியை உறுதி செய்ததோடு, பொதுக்கூட்டத்தில் தேமுதிக நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்பதை தெளிவு படுத்துகிறது.

விஜயகாந்த்தை தொடர்ந்து ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கொடிகளும் வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், அ.தி.மு.க கூட்டணியில் த,மா,கா-வும் இடம்பெறும் என்பது உறுதியாகியுள்ளது.