பொதி மூட்டையா புத்தகப்பை? இனி இவ்வளவு எடை தான் புத்தகப்பை இருக்க வேண்டும்-மத்திய அரசு

 

பொதி மூட்டையா புத்தகப்பை? இனி இவ்வளவு எடை தான் புத்தகப்பை இருக்க வேண்டும்-மத்திய அரசு

மாணவர்களின் புத்தகப் பை எவ்வளவு எடை இருக்க வேண்டும் என்பது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது

டெல்லி: மாணவர்களின் புத்தகப் பை எவ்வளவு எடை இருக்க வேண்டும் என்பது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு ஒரு முக்கிய அடையாளமாக புத்தகப்பை இருக்கிறது. ஆனால், புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவற்றை அளவுக்கு அதிகமான பையில் வைத்து மாணவர்கள் சுமந்து செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாணவர்கள் தங்களது உடல் எடையில் 30 முதல் 35 சதவீதத்தை புத்தகப்பையாக சுமந்து செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தை பொறுத்தவரையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முப்பருவ பாடமுறை திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் குறைந்த எடையில் தான் சுமக்கின்றனர் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் சில தனியார் பள்ளிகளில் அளவுக்கு அதிகமாகவே புத்தகப்பையை பொதி மூட்டையை சுமப்பது போல மாணவர்கள் சுமந்து செல்கின்றனர்.

இந்நிலையில், மாணவர்களின் புத்தகப் பை எவ்வளவு எடை இருக்க வேண்டும் என்பது குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பையின் எடை ஒன்றரை கிலோதான் இருக்க  வேண்டும். 3 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் புத்தகப்பை எடை 2 முதல் 3 கிலோ, 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை எடை 4 கிலோ, 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்கள் புத்தகப்பை எடை நான்கரை கிலோ, 10-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை எடை 5 கிலோவுக்கு அதிகம் இருக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் அறிவுரைப்படி, 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் கொடுக்கக்கூடாது. 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் கணிதம் பாடங்களை தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது. 3 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மொழிப்பாடம், சுற்றுச்சூழல் மற்றும் கணிதம் தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.