பொங்கல் பரிசுக்கு கட்டுப்பாடு… அதிமுக முறையீடு நிராகரிப்பு

 

பொங்கல் பரிசுக்கு கட்டுப்பாடு… அதிமுக முறையீடு நிராகரிப்பு

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு ரூ 1000 வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டை எதிர்த்து அதிமுக வழக்கறிஞர் சார்பில் செய்யப்பட்ட முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சென்னை: வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு ரூ 1000 வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டை எதிர்த்து அதிமுக வழக்கறிஞர் சார்பில் செய்யப்பட்ட முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை சமீபத்தில் தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றியபோது தமிழகத்தில் இருக்கும் அனைத்து குடும்ப அட்டைக்காரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ 1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு எழுந்தது. மேலும், அதற்கான பணிகளும் தொடங்கி நடைபெற்று வந்தன.

இதனையடுத்து தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ 1000 வழங்க தடைவிதிக்க வேண்டும் என கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், பொங்கல் பரிசு ரூ 1000 அனைத்து குடும்ப அட்டைக்காரர்களுக்கும் வழங்கக்கூடாது எனவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், வேண்டுமானால் இதுகுறித்து மேல்முறையீடு செய்யலாம் எனக்கூறி அவரது முறையீட்டை நிராகரித்தனர்.