பைக், கார் வாங்கினா இனி பதிவு கட்டணம் கிடையாது?

 

பைக், கார் வாங்கினா இனி பதிவு கட்டணம் கிடையாது?

எலக்ட்ரிக் பைக், கார் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், அவற்றுக்கான பதிவு கட்டணத்தை ரத்து செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. கட்டணத்தை தள்ளுபடி செய்வதற்கு வசதியாக மத்திய மோட்டார் வாகன விதிமுறைகளில் திருத்தம் செய்வது தொடர்பாக வரைவு அறிக்கையை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

காற்று மாசுவால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, குப்பை கூளங்களை எரிப்பதால் ஏற்படும் புகை போன்றவற்றால் காற்று மாசு அடைகிறது. இவற்றை எல்லாம் காட்டிலும் சாலைகளில் செல்லும் வாகனங்கள் வெளியிடும் புகைதான் காற்று மாசடைய  முக்கிய காரணமாக உள்ளது. இதனால் சமீப காலமாக சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்று குரல்கள் எழு தொடங்கியுள்ளது.

 இ பைக்

மின்சார வாகனங்களை வரவேற்க மற்றொரு பெரிய பொருளாதார காரணமும் இருக்கிறது. நம் நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் 90 சதவீதத்தை இறக்குமதியாக வாயிலாகத்தான் பூர்த்தி செய்கிறோம். அதாவது நாம வண்டியில போடுற ஒரு லிட்டர் பெட்ரோலில் 100 மி.லி.தான் உள்நாட்டில் உற்பத்தி செய்தது. பாக்கி 900 மி.லி. வெளிநாட்டுல இருந்து இறக்குமதி செய்ததுதான். கச்சா எண்ணெய்  இறக்குமதிக்காக மத்திய அரசு பெரும் தொகையை வெளிநாடுகளுக்கு கொடுக்கிறது. கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினத்தை கணிசமான அளவில் குறைத்தால் அந்த நிதியை பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.

இவற்றையெல்லாம்  கூட்டி கழித்து பார்த்த  மத்திய அரசு மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க முடிவு செய்தது. அடுத்த 5 ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் உற்பத்தியை பெருக்கவும், இந்திய சாலைகளில் பவனி வரும்  வாகனங்களில் மின்சார வாகனங்களின் பங்கு 15 சதவீதமாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் ப்ளூ பிரிண்ட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கடந்த ஆண்டு அப்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த நிதின் கட்கரி கூறி இருந்தார்.

மின்சார வாகனங்கள்

இந்த சூழ்நிலையில், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், பைக், கார் உள்பட மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கும் பதிவு கட்டணத்தை ரத்து செய்ய மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. அதாவது புதிதாக வாங்கிய எலக்ட்ரிக் வாகனத்தை பதிவு செய்வதற்கான பதிவு கட்டணத்தையும், பதிவு புதுப்பிதற்கான கட்டணத்தையும் தள்ளுபடி செய்வதற்கு மத்திய அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

மின்சார வாகனங்களுக்கான பதிவு கட்டணத்தை ரத்து செய்வதற்கு வசதியாக மத்திய மோட்டார் வாகனங்கள் சட்டத்தில் விதி 81ல் திருத்தம் செய்வது தொடர்பாக அனைத்து தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று மத்திய அமைச்சகம் வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. மத்திய அமைச்சகத்தின் இந்த பரிந்துரை தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துக்களை, வரைவு அறிக்கை வெளியான நாளிலிருந்து  30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். அவற்றை கருத்தில் கொண்டு மின்சார வாகனங்களுக்கான பதிவு கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக மத்திய அரசு முடிவு எடுக்கும்.